Saturday, January 20, 2018

கடந்த ஆண்டு மாணவர் நடத்திய அறப்போர்!



வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே
திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே
வரலாறு காணாத போராட்டம் கண்டீர்
வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்
தரமான அறவழியே போராட்டம் போக
தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக
சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே
சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?


புலவர் சா இராமாநுசம்

Thursday, January 18, 2018

இனிய வலைப்பதிவு உறவுகளே! வணக்கம்!






இனிய வலைப்பதிவு  உறவுகளே!
       வணக்கம்!
    கடந்த  சில நாட்களாகவே  என் நெஞ்சில்
ஒரு நெருடல்! அது, எப்படி இருந்த  பதிவுலகம் இப்படி
ஆகிவிட்டதே என்ற ஆதங்கம்தான்   !இன்று என்னை
மேலும் வருத்தமுறச் செய்து  விட்டது தமிழ்மண
வாசகர் பரிந்துரையில் ஓர் இடுகை கூட இடம் பெற
வில்லை என்ற காட்சி!
     காரணம் நான்  உணர்ந்த வகையில் தமிழ்
மணத்தில் வைக்கப் பட்டுள்ள மதிப் பெண் பட்டையே
ஆகும் தெரிந்தோ தெரியாமலே, அறிந்தோ அறியாமலோ
உள்ளுற ஒரு போட்டி மனப்பான்மை வளர்ந்து  வருகிறது
என்பதே என்  தாழ்மையான  கருத்து! பதிவர்கள் எப்படிக்
கருதுகிறார்களோ  நான் அறியேன்!

      எனவே நான் இன்று  முதல் ஒரு முடிவெடுத்துள்ளேன்
மேலும் இது என் வேண்டு கோளாகவும்  அறிவிப்பாகவும் ஆகும்
அருள் கூர்ந்து ,இனி யாரும் என்பதிவுகளுக்கு ,மறுமொழி மட்டும்
போதும்  மதிப்பெண் போட வேண்டாம் என்பதோடு நானும்
யார் பதிவுக்கும் மறுமொழிமட்டுமே போட்டு மதிப்பெண்
 போடமாட்டேன்! என்பதை அன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்!  மன்னிக்க!

    புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, January 16, 2018

வள்ளுர் திருநாள் வாழ்த்துக் கவிதை!





வாழ்க்கைக்கே  வழிகாட்டும்  வள்ளுவமே-அதனை
   வரவேற்று  நாள்தோறும்  உள்ளுவமே
பாழ்பட்டு  போகாது ! அறிவீர்  என்றும் –அந்த
   பாதையில் போவதால் துயரம் ஒன்றும்
சூழாது  உலகினில் வாழ்வோம் நன்றே- என்றே
    சொல்வது மிகையல்ல !உண்மை இன்றே
வீழாது காத்திடும்  ஊன்று  கோலாம்- மேலும்
    விளக்கவே  வந்த  வள்ளுவர்  திருநாளாம்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, January 15, 2018

கூட்டாளி மாட்டுக்கும் பொங்கலிட்டு –உழவர் கும்பிட வந்திடும் தைத்திருநாள்



மாட்டுக்கும் பொங்கலை வைத்து முன்னோர்-தமிழ்
மண்ணின் பெருமையை உயர்த்தி இன்னோர்
நாட்டுக்கும் இல்லாத புகழை வைத்தார்-அந்த
நல்லவரைப் போற்றி பொங்கல் வைப்போம்

கூட்டாளி மாட்டுக்கும் பொங்கலிட்டு –உழவர்
கும்பிட வந்திடும் தைத்திருநாள்-இன்று
பாட்டாளி போற்றிடும் மேதினம்போல் –இந்த
பாரெல்லாம் கொண்டாச் செய்திடுவோம்

புலவர் சா இராமாநுசம்

Sunday, January 14, 2018

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை! தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்




தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
      தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
      புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
 ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
      அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
 மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
       மேதினி உணர்ந்திட இங்கே  விண்டோம்

 
      
 உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
      உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
 துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
      தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
 கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
      கைகள் முடங்கிடின்  எதுவு மின்றே
 மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
       மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

 புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
      போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
 இயலாது! இயலாது !கண்டோ  மன்றே-அந்த
        ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
       முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை  மக்க ளய்யா-உடன்
        பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

        அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!

                                 புலவர் சா இராமாநுசம்