Saturday, January 13, 2018

போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே



போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும்
புகைசூழ ஆயிற்றி மார்கழியே
ஓயாத பனிமூட்டம் மார்கழியே-அத்துடன்
ஒன்றேன கலந்திட மார்கழியே
தாயாக தைமகள் நாளைவர-இங்கே
தந்திட வேண்டினோம் ! இன்பம்தர
வாயார வாழ்த்தியே வணங்கிமிக-நாங்கள்
வரவேற்று மகிழ்வோடு பாடுகின்றோம்


புலவர் சா இராமாநுசம்

Friday, January 12, 2018

முகநூல் பதிவுகள்



12-ம் தேதியே அதாவது நாளை யே விடுமுறை என்பதை முன் கூட்டியே அறிவித்திருந்தால்
ஊர் செல்ல இருக்கின்ற மக்கள் பயணச்சீட்டை அதற்கேற்ப பதிவு செய்திருப்பார்கள்!எதிலும் திட்ட மில்லாத அரசே இன்று நடைப் பெற்றுக் கொண்டடிருக்கிறது!!! என்று மக்கள் புலம்புவது
தீருமா!?

மீண்டும் பேச்சு வார்த்தைக்கு
அழைத்தால் வேலைநிறுத்தம்
இரவே திரும்பப் பெறுவோம்- ஊழியர் சங்கம் அறிவிப்பு! ஆளும் அரசு ஆவன செய்ய வேண்டும்!

ஒருவனுக்குத் தேவைக்குமேல் பணம் சேர்ந்து விட்டால்போதும், மேலும் பணத்தை அவன் தேடாமலேயே அப் பணமே நாளும் பணத்தைத்
தேடித் தரும்!

உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் ! என்பதிவைப்
படிக்கின்ற யாரும் மறுமொழியை ஆங்கிலத்திலத்தில்
போட வேண்டாம் என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன் மன்னிக்க!

பொங்கல் விழா நெருங்குகிறது
போக்கு வரத்துத்து தொழிலாளர் பிரச்சினையை விரைந்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்! மக்களின் அச்சத்தை , தவிப்பைப் போக்க இருதரப்பும் முயல வேண்டும்

உரிமைக்குக் கூட இல்லை உழைத்த உழைப்புக்கு உரிய
ஊதியமும் ஓய்வுபெற்றோர்
ஊதியமும் முறையாக வழங்கப்பட வில்லை என்றால் போராடத்தானே செய்வார்கள் அதனை
நீதி மன்றங்கள் மூலம் தடை செய்வதும் பணிநீக்கம்
செய்வோம் என்று மிரட்டுவதும் மக்களாட்சியா!!

தீதும் நன்மையும் நமக்கு பிறரால் வருவதல்ல அதற்குக் காரணம் நாமேதான்! மேலும் அதனால்
நோவதும் விடு படுவதும் அதுபோன்றதே!

நடிகர் இரஜினி அவர்கள் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு பலமான அடித்தளம் அமைக்க கால அவகாசம் கொடுத்து
முயல்வது பாராட்டத் தக்கதே அதனால்தான் முறைப்படி இன்னும் (ஏறத்தாழ) மூன்றாண்டுகள் கழித்து வரும் சட்ட மன்றத் தேர்தலில் மட்டுமே போட்டி என்று அறிவித்தார் சரி ஒருவேளை ஆளும்
ஆட்சி கலைந்து தேர்தல் முன் கூட்டியே வருமானால்
என்ன செய்வார் போட்டி!!!!! இடுவாரா?

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, January 11, 2018

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!



இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
எவராலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாபத் தோணி
துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
வேதனை மண்டியே மனதினில் ஓட



தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்
சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்q
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமையோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
பலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 9, 2018

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம் அப்படியே!




முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி
 
புல வர் சா இராமாநுசம்

Monday, January 8, 2018

முயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை!





முயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை
   முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை
உயர்ந்தோங்கி வளர்கின்ற மரமேபோன்றே-எவரும்
   உள்ளத்தில் பெறுமுறுதி  வரமாத்தோன்ற
வியந்தேதான் காண்போரும் எண்ணவேண்டும்-ஆய்ந்து
   வினையாற்றி வழிகாணில் வெற்றியாண்டும்
பயனாற்றும் வாழும்வகை நாளும் காட்டும்-நன்கு
   பண்பட்ட மனிதரென புகழும்  சூட்டும்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...