Tuesday, January 9, 2018

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம் அப்படியே!




முடிந்தது வாழ்வுப் பாதையென - உன்
முயற்சி முறியா நிலமையென
ஒடிந்து போகா உறுதிதான் - என்றும் 
உயரச் செய்யும் இறுதிவரை
வடிந்து போவது வெள்ளந்தான் - உன்
வாழ்க்கைப் பாதையை உள்ளந்தான்
மடிந்து போகா வழிகாட்டும் - மீண்டும்
மலர மனமெனும் விழிகாட்டும்

பணிவும் பண்பும் மிக்கோனாய் - பிறர்
பார்த்து விரும்பத் தக்கோனாய்
துணிவு ஒன்றே துணையாக - நீ
தொடர்ந்தால் செயலை முறையாக
மணியா ஒளிதர எச்செயலும் - வெற்றி
மாலைத் தானே வரமுயலும்
அணிசெய் தங்க விலைபோல - நீ
அவனியில் உயர்வாய் நாள் போல

தோற்பது வெற்றியின் முதற்படியே - வரின்
துவள வேண்டாம் அப்படியே
ஏற்பது கொண்டு ஏறிடுவாய் - வெற்றி
ஏணியின் படியென தேறிடுவாய்
காப்பது நம்மை நாமேதான் - நம்
கண்ணைக் காப்பது இமையேதான்
ஏய்ப்பது இயலா எவராலும் - நன்கே
எண்ணிச் செயல்பட தவறாதே

செய்யும் தொழிலே தெய்வமென - நம்பி
செய்யின் எவரும் உய்வோமென
பொய்யில் உண்மை எனக்கண்டே - அந்த
பொன்னுரை தன்னை மனங்கொண்டே
மெய்யில் உயிரும் உள்ளவரை - வாழின்
மேதினி தன்னில் ஏதுகுறை
ஐயன் வள்ளுவன் வகுத்தவழி - தினம்
அறிந்து நடப்பின் இல்லைபழி
 
புல வர் சா இராமாநுசம்

9 comments:

  1. தோல்விதான் வெற்றிக்கு முதல்படின்னு சொல்றதுலாம் சரி, அதுக்காக தோத்துக்கிட்டே இருந்தா?!

    ReplyDelete
  2. கவிதை வரிகளை இரசித்தேன் ஐயா
    நம்பிக்கை மழை பொழியட்டும்
    த.ம.2

    ReplyDelete
  3. தோல்விதான் வெற்றியின் முதல் படி என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் ஹா ஹா ஹா..

    ReplyDelete