Thursday, December 28, 2017

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர் கற்பனை வளமது கற்றிட வாரீர்!



கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

Sunday, December 24, 2017

சின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றே



சின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி
செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றே
கன்னத்தில் கைவைத்து கவலைப் படவும்-அந்தோ
கலங்கிடுவோர் உள்ளத்தை ஏக்கம் தொடவும்
எண்ணத்தை இனியேனும் மாற்றிக் கொள்ளல்-எதிர்நாள்
ஏற்றதென கட்சிகளே அனைத்தும் உள்ளல்
திண்ணமுற காட்டுகின்ற காட்சி தானே-இடைத்
தேர்தலிலே ஆர்கேநகர் சாட்சி தானே


புலவர் சா இராமாநுசம்