Friday, December 8, 2017

பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே!



தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொலையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவளோ
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முகத்தின்
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-எனது
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினமே
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவளும்
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் னுடை
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என்னின்
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே  கவிப்பெண்ணே-தீராப்
பழியும் வருமுன்  வாயின்னே

புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 5, 2017

எங்கே போனாய் நிம்மதியே-உனையே எண்ணிக் கலங்குது என்மதியே!



எங்கே போனாய் நிம்மதியே-உனையே
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நானும்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-பட்ட
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீயும்
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என்றே
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அன்னார்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வியே
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீயும்
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்றே
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருளே
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்

Sunday, December 3, 2017

அன்பின் இனிய வலையுலக உறவுகளே!





அன்பின் இனிய வலையுலக உறவுகளே!
         வணக்கம் கணகில!
   வயதால் மட்டுமே மூத்த வலைப்பதிவராகிய  நான் உங்கள் பார்வைக்கு
பணிவன்போடு வைக்கும் ஒருசில கருத்துகள்!
   இன்றைய  வலையுலகம் ஆரோக்கியமாக இயங்கவில்லை என்பது , என்
கருத்து! இனம் காணமுடியாத ஒருவகைப்  போட்டி ,மனப்பான்மை உள்ளுக்குள் உருவாகி வருகிறது! இதனைக்  கூர்ந்து பார்தால்  உண்மை தெரியும்  மேலும் அதிகம் விளக்கினால் அதுவே தீமை தரலாம்
     ஆனால் ஒன்றை இங்கே அழுத்தமாக செல்வதெனில் அதற்கு!!!!!!!
    காரணம் தமிழ்மணத்தில் வைக்கப் பட்டுள்ள ரேங்குப் பட்டியலும்
மதிப்பெண்  பட்டையும்தான் என்பது  தெளிவாகத் தெரிகிறது
    என்னுடைய ரேங் பனிரெண்டில் இருந்த போதும் நான் கவலைப் பட்டதில்லை இன்று நான்கில் இருப்பது  கண்டு மகிழவும்  இல்லை
     அது மட்டுமல்ல,!வலைப்பதி ஆனாலும் ,முகநூல் ஆனாலும் என்
கருத்துகளை எழுதுவதில்  மட்டுமே நான் கருத்தாக இருப்பேன்
      இன்று  வலைப்பதிவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்
சுருங்கி விட்டது என்பது பலரும் அறிந்த உண்மை!
      உள்ள சிலரும் விலகி செல்லாமல் இருக்க வழிகாண வேண்டும்
      சிந்திப்போம் செயல்படுத்துவோம்!
         உங்கள்  கருதென்ன!!!?
புலவர்  சா  இராமாநுசம்