தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொலையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக்
கண்முன் காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவளோ
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முகத்தின்
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-எனது
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினமே
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவளும்
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் னுடை
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்னின்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப்
பழியும் வருமுன் வாயின்னே
புலவர் சா இராமாநுசம்