Friday, December 1, 2017

பட்டே அறிவது பட்டறிவு-எதையும் பகுத்து அறிவதும் பகுத்தறிவே



பட்டே அறிவது பட்டறிவு-எதையும்
   பகுத்து அறிவதும் பகுத்தறிவே !
தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
  தொட்டு அறிவது  பட்டறிவு
விட்டால் குழந்தை தொடுமென்றே-நாமும்
  விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
   கெட்டோம் அறிவது பகுத்தறிவு

ஆய்ந்துப் பார்த்தல் பகுத்தறிவு-தந்திடும்
   அநுபவம் அனைத்தும் பட்டறிவே
மாய்ந்து போமுன் மனிதர்களே—இதையும்
   மனதில் கொள்வீர் புனிதர்களே
வாய்ந்தது துன்ப வாழ்வென்றே-நாளும்
   வருந்தி நிற்றல் தீர்வன்றே
ஓய்ந்து போகா உளம்பெற்றே-பகுத்து
   உணரின் வாழ்வீர் நலம்பெற்றே

சொன்னவர் யாராய் இருந்தாலும்-அவரே
    சொன்னது எதுவாய் இருந்தாலும்
சின்னவர் பெரியவர் என்பதில்லை-அதையும்
     சித்திக்க முயல்வது தவறில்லை
என்னவோ எதுவென மயங்காதீர்-பகுத்து
     எண்ணியே ஆய தயங்காதீர்
இன்னார் இனியர் பாராதீர்-எதையும்
     எண்ணாமல் என்றும் கூறாதீர்

சித்தர் பாடல் பட்டறிவாம் -முன்னோர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவரின்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
உத்தமர் காந்தியின் பட்டறிவே-சுதந்திர
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
எத்தகை செயலுக்கும் பட்டறிவே-ஆமென
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!

                  புலவர் சா இராமாநுசம்

Monday, November 27, 2017

தேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்



நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்-ஆயின்
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!-மேலும்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!-சாடும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!-ஏனோ
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!-அதுவே
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!-அவரே
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும் போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!-மனதில்
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!-ஏதும்
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல்!-கண்டதை
இங்கே நானும் எழுதுவ-என்னுள்
இருப்பதும் நீயா நானேதான்

புலவர் சா இராமாநுசம்