Thursday, November 9, 2017

நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!



நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!



ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கா இல்லை  மேலும்

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குனிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 8, 2017

சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை !



எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கெனும் தேடியும் காணல்அருமை
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும்
மங்காது நடக்குதே மக்களவையே-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவையே
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் விணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக
பொல்லாத விளைவென்னை தேடிவருமே-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்பங்கள் அதுதானே எனகுப் பெருமை

புலவர் சா இராமாநுசம்

Monday, November 6, 2017

முகநூல் தந்த முத்துக்கள் மூன்று



  மதி!

விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு
   விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
   மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
   கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
   தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!

            தென்றல்!

தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
   தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
  உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
   செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
   தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

          நினைவு!


கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
   கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
   தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
   சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
   குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை

               புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...