சொந்தம் என்றே ஏதுமிலை –சிலர்
சொல்லும் சொற்களில் பொருளில்லை
பந்தம் பாசம் எல்லாமே-பெரும்
பணமும் வந்தால் சொல்லாமே
அந்தம் ஆகிடும் அறிவீரே-இந்த
அவனியில் நடப்பதாம் புரிவீரே
சிந்தனை செய்வீர் மானிடரே-இதை
செவியில் ஏற்றால் ஏனிடரே
பிறந்த உடனே அழுகின்றோம்-இனி
பிறவா நிலைதர தொழுகின்றோம்
இறந்தால் மண்ணொடு கலக்கின்றோம்-அது
இயற்கை என்றே உரைக்கின்றோம்
சிறந்தார் இவரெனச் செப்பிடவே-நம்
செயலைக் கூறியே ஒப்பிடவே
மறைந்தார் அடடா இன்றென்றே-மக்கள்
மதிக்க மறைதல் நன்றின்றே
வந்தவர் அனைவரும் போவதுவே-இயற்கை
வகுத்த நிலையென ஆனதுவே
நிந்தனை பேசிட ஏதுமில்லை-இங்கே
நிலையென இருப்பவர் எவருமில்லை
சந்தையில் கூடும் கூட்டமென-மனித
சரித்திரம் கலைந்து ஓட்டமென
மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
மரணம் வரவும் வீழ்கின்றோம்
இதுதான் வாழ்க்கை இன்றுவரை-இதில்
ஏற்றமும் தாழ்வும் வருமேமுறை
எதுதான் வாழ்வென அறிவோமே-அதில்
ஏற்புடை தன்னை ஏற்போமே
மதிதான் நல்வழி கண்டிடவும்-நம்
மனமே அவ்வழி விண்டிடவும்
விதிதான் வலிதென ஆயாதீர்-வரும்
வினையெனச் சொல்லி ஓயாதீர்