கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்பட அறிவீரா? -உடன்
நிம்மதி ஏற்பட செய்வீரா?
பட்டப் பகலில் வீடெங்கும்-நகையோ
பணமோ கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!
வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
வாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
அல்லல் பட்டே சாகின்றான்!
இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
நீங்கா கறையே கொள்வீரே!
புலவர் சா இராமாநுசம்