Saturday, September 16, 2017

நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே!



நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே
நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே
நோக்கினால் தலைதானே சற்றும் நன்றே-உள்ளம்
நோகாத நிலைதானே வருதல் என்றே
தேக்கினார் பணிமுற்றும் முடங்கிப் போக-ஆள்வோர்
தினச்சண்டை ஏட்டிக்கி போட்டி யாக
ஆக்கினார் ஆட்சியை நாசம் அந்தோ-மக்கள்
அல்லாட விலையேற்றம் உயரும் அந்தோ


புலவர் சா இராமாநுசம்

Thursday, September 14, 2017

நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும் நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ


நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும்
நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ
வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர் நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பார்ப்பீரய்யா-அந்த
பாவிகளின் துயரத்தைத் தீர்ப்பீரய்யா
நீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்!

பணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே
ஏழைக்கோ ! இலவசம்! தொல்லை யில்லார்
கணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதா புலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றா ரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, September 12, 2017

நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும் நலமுற வந்தாய் தமிழ்மணமே!




நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும்
  நலமுற வந்தாய் தமிழ்மணமே
நின்றே விட்டதோ தமிழ்மணமே-என்றே
  நினைத்தவர்  மனதில் தமிழ்மணமே
நன்றே நிம்மதி தமிழ்மணமே-நீயும்
  நல்கிட வந்தாய் தமிழ்மணமே
நன்றியை கவிதையாய் தமிழ்மணமே-இங்கே
  நவின்றேன் வாழ்க தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே!


மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே
நிலமடந்தை நீள்வயிற்றில் நீயுதித்தாய் ஆனாலும்
பலரகத்தில் பாரினிலே பரவிநீ பூத்தாலும்
சிலரகத்தில் மட்டுமந்த சிறப்பான மணமேனோ?

புலவர் சா இராமாநுசம்