Saturday, August 19, 2017

இனிய உறவுகளே வணக்கம்!





இனிய உறவுகளே வணக்கம்!
       தற்போது  வலையில்  பதிவு  போடுவதில் குறிப்பிட்ட
சிலரே மாறி மாறி  வருகிறோம்  சில புதிய  பதிவர்கள்
வந்து பதிவு போடுவதையும்  பார்க்கிறோம் ஆனால் அவர்கள்
பதிவை யாரும்  படிப்பதாகத்  தெரியவில்லை அவர்களை
ஊக்கப்  படித்தி முன்னுக்குக்  கொண்டு  வருவது  நம்
கையில்தான் இருக்கிறது !அது நமது கடமையும் ஆகும்  நாம்  அவ்வாறு செய்வது
வலையின்  எதிரகால வளர்ச்சிக்கு  உதவும்  என்று
கருதுகிறேன் நீங்கள்  என்ன  கருதுகிறீர் என்பதை எழுதி
உதவுங்கள்! நன்றி!
                 புலவர்  சா இராமாநுசம்

Friday, August 18, 2017

எனது ஊரே எதுவெனக் கேட்பீர்!



எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் எதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே
செப்பிட இதுதான என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 16, 2017

இட்டபயிர் இட்டவனே அழிக்கும் நிலையே –இன்று இருக்கிறது தமிழ்நாட்டின் வறட்சி நிலையே!





உண்ணுகின்ற  உணவுதனை   தந்தோ  னின்றே நஞ்சு
   உண்ணுகின்றான்  சாவதற்கே  கொடுமை  யன்றே!
எண்ணுதற்கே   இயலாத   துயரந் தானே அதை
    எண்ணுகின்ற  அரசுகளும்  இல்லை  வீணே!

பாடுபட்டு   இட்டபயிர்   கருகிப்  போக தீயும்
   பற்றிவிட   வயிரெரிந்து  உருகிச்  சாக
மாடுவிட்டு  மேய்க்கின்ற  காட்சி  காண்பீர் நல்
   மனங்கொண்டார்  அனைவருமே  கண்ணீர்  பூண்பீர்!

இட்டபயிர்  இட்டவனே  அழிக்கும்   நிலையே இன்று
   இருக்கிறது   தமிழ்நாட்டின்  வறட்சி  நிலையே!
திட்டமில்லை  தீர்பதற்கும்  முயற்சி  இலையே உழவன்
    தேம்பியழின்    வைப்போமா   அடுப்பில்  உலையே!


!கத்திதினம் கதறியழும்  மக்கள் ஓய கேளாக்
     காதெனவே  சங்கொலியும் சென்றுப்  பாய,
சித்தமது  கலங்கியவர்  செய்வ தறியார் கல்லில்
    செதுக்கியதோர்  சிலையென  ஆளும்  உரியார்!

பஞ்சமிக  பசியும்மிக  வாட்டும்  போதே இன்று
    பதவிசுகம்  காண்பார்கள்  உணர்வார்  தீதே!
கொஞ்சமேனும்  அக்கறையே   எடுப்பார்  இல்லை பல்வேறு
    கட்சிகளும்  இருந்துபயன்!ஒற்றுமை இல்லை!

நாதியற்றுப்  போனாரே   உழைக்கும்  மக்கள் வாழும்
     நம்பிக்கை   ஏதுமின்றி  ஏழை  மக்கள்
வீதிவலம், போராட்டம்  நடத்து  கின்றார் மேலும்
     வேற்றுமையில்  ஒற்றுமை  இதுவா ? என்றார்!

                             புலவர்  சா  இராமாநுசம்