முடிந்தவரைப் பிறருக்கு
உதவ வேண்டும் –அவை
முடியவில்லை என்றாலும்
தளர வேண்டாம்
விடிவுவரும்
வரைநமக்கு பொறுமை வேண்டும் –இரவு
விடியாமல்
போவதுண்டா கலங்க வேண்டாம்
கடிதுவரும் என்றெண்ணி
இருத்தல் வேண்டும் –சற்று
காலமது
ஆனாலும் கவலை வேண்டாம்
கொடிதுயெனில் எதையுமே
தவிர்த்தல் வேண்டும் –சிறு
குற்றமெனில் அதைப்பெரிதுப்
படுத்தல் வேண்டாம்
எண்ணியெண்ணி எச்செயலும்
செய்தல் வேண்டும் –நாம்
எண்ணியபின்
தொடங்கியதை விடுதல் வேண்டாம்
கண்ணியமாய் என்றுமே
வாழ்தல் வேண்டும் –வரும்
களங்கமெனில் அப்பணியைச்
செய்தல் வேண்டாம்
புண்ணியவான் என்றும்மைப்
போற்ற வேண்டும் –பிறர்
புண்படவே
சொல்லெதுவும் புகல வேண்டாம்
மண்ணுலகில் அனைவரையும்
மதித்தல் வேண்டும் – குணம்
மாறுபட்டார்
தம்முடைய தொடர்பே வேண்டாம்
சட்டத்தை மதித்தேதான்
நடத்தல் வேண்டும் – பெரும்
சந்தர்ப
வாதியாக நடத்தல் வேண்டாம்
திட்டமிட்டே செலவுதனை
செய்தல் வேண்டும் –ஏதும்
தேவையின்றி
பொருள்தன்னை வாங்கல் வேண்டாம்
இட்டமுடன் ஏற்றபணி
ஆற்ற வேண்டும் – மனம்
இல்லையெனில் மேலுமதைத்
தொடர வேண்டாம்
கட்டம்வரும் வாழ்கையிலே
தாங்க வேண்டும் –உரிய
கடமைகளை
ஆற்றுதற்கு தயங்க வேண்டாம்
முன்னோரின் மூதுரையை
ஏற்க வேண்டும் –வாழும்
முறைதவறி
வாழ்வோரின் தொடர்பே வேண்டாம்
பின்னோரும் வாழும்வழி
செய்தல் வேண்டும் –பழியைப்
பிறர்மீது
திணிக்கின்ற மனமே வேண்டாம்
இன்னாரும் இனியாராய்க் கருதல் வேண்டும் –பெருள்
இல்லாரை
எளியராய் எள்ளல் வேண்டாம்
தன்னார்வத் தொண்டரெனும்
பணிவு வேண்டும் –எதிலும்
தன்னலமே
பெரிதென்று எண்ணல் வேண்டாம்
புலவர் சா இராமாநுசம்