Saturday, May 27, 2017

என் முகநூல் பதிவுகள்

உறவுகளே!
குரங்கு ஆப்பம் பங்கிட்ட
கதைபோல ஆகிவிடும், அண்ணா திமுகா வின், இரண்டு அணிகளின் எதிர் காலம்!

ஆலமரத்தின் விதை ,மிகவும் சிறியதாக இருந்தாலும் முளைத்து மரமாகி தழைத்தால்
பெரிய படையே அதன் நிழல் தங்கி ஓய்வு கொள்ள
முடியும்! ஆனால் பனை மரத்தின் விதை மிகப் பெரியதாக இருந்தாலும் முளைத்து மரமானால் அதன்
நிழலில் ஒருவர் கூட தங்க இயலாது ஆகவே நாம்
ஆலம் விதையாகத் தான் வாழ வேண்டும்!


ச என்ற எழுத்தில் தான்( பெயர் ) ஆரம்ப மாகிறது என்பதால் சந்தணமும் சாக்கடையும் ஒன்று என்றா
சொல்ல முடியும்? அப்படிதான் சில நிகழ்வுகள் நாட்டில் நடப்பதைப் பார்கும் போது எண்ணத் தோன்றுகிறது

கற்றலின் கேட்டல் நன்று,என்று
காது கேட்பவனிடம் ,சொல்வது
பலன் தரும்!! பிறவிச் செவிடனிடம் சொல்வதால்
பலன் உண்டா!

சொல்லுதல் எளிது! யாருக்கு!பிறருக்கு!
செய்வது அரிது! நமக்கு

அனைவருக்கும் நன்றாம் பணிவாக நடத்தல் என்றாலும்
செல்வர்கள் , அவ்வாறு நடந்தால் அதுவே அவர்களுக்கு
மேலுமொரு செல்வமாகும்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை என்பர்! ஆனால்
சென்னையில் மட்டும் மழை இல்லையே!
ஏன்? அப்போ!!!!!!!?

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, May 25, 2017

காட்டில் காய்ந்த நிலவாக





காட்டில்  காய்ந்த  நிலவாக
    கடலில்  பெய்த   மழையாக-தமிழ்
நாட்டில்  நடக்கும்  ஆட்சிதனை
    நாளும்  நடக்கும்  காட்சிதனை-தினம்
ஏட்டில் வந்திடும்   செய்திகளே
    எடுத்துக்  காட்டிட  உய்தியிலே! அதனை
பாட்டில் இங்கே  கூறிவிட்டேன்
    படித்திட  பலரும்  முடித்துவிட்டேன்

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 23, 2017

நன்றி அறிவிப்பு கவிதை!





ஆறுதலை அளித்திட்ட அனைவருக்கும்  நன்றிதனை
கூறுகின்றேன்  சரியென்று  குவித்தகரத்  தோடதனை
பேறுபெற பெருமைமிக பிறவியிலே முடிந்தவரை
ஊறுபெற எவரையுமே  உரைத்தில்லை  கடிந்தவரை

என்றே  வாழ்ந்திட்டேன் எண்ணத்தில் இறக்கும்வரை
நன்றே  வரைந்திடுவேன் நற்றமிழில்  சிறக்கவுரை
கற்றேன்  இயன்றவரை காணவில்லை  எல்லைதனை
உற்றேன்! உவகைதன்னை உறவுகளே வணங்குகிறேன்!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, May 22, 2017

படிப்பவரும் குறைந்துவிட பலபேரைக் காணவில்லை!




நித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட
சித்தம் இருந்தாலும் செயல்படுத்த இயலவில்லை!
முதுமை முன்வாட்ட முதுகுவலி பின்வாட்ட
பதுமை ஆகிவிட்டேன் பதிவெழுதா நிலைபட்டேன்!

மோனை எதுகையென முறையாக எழுதியவன்
சேனை இழந்தரசாய் செயலற்று போய்விட்டேன்!
தும்பிக்கை இழந்ததொரு யானையெனத் துயர்பட்டே
நம்பிக்கை போயிற்றாம் நல்லோரே ! மன்னிப்பீர்!

படிப்பவரும் குறைந்துவிட பலபேரைக் காணவில்லை
துடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை!
உடலுக்கே சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்
கடலுக்கே ஆலைபோல கவலையிலே மனமோயா!

புலவர்   சா  இராமாநுசம்