Saturday, April 22, 2017

கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்!



கற்றாரின் நற்சொல்லை ஏற்க வேண்டும்
கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்
பெற்றாரைத் தெய்வமெனப் வணங்க வேண்டும்
பிறர்நோக பேசாது இருத்தல் வேண்டும்
உற்றாரை அரவணைத்து வாழ்தல் வேண்டும்
ஊர்மெச்ச நல்லவராய் நடத்தல் வேண்டும்
அற்றாரின் அழிபசியைப் போக்க வேண்டும்
ஆணவத்தை அடியோடு நீக்க வேண்டும்


புலவர் சா இராமாநுசம்

Tuesday, April 18, 2017

காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம் கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்!



காணாது கண்டதுபோல் உரைக்க வேண்டாம்
கல்நெஞ்சக் காரனாக இருக்க வேண்டாம்
நாணாது பொய்சொல்லி திரிய வேண்டாம்
நயவஞ்ச காரரொடு தொடர்பே வேண்டாம்
வீணாக பொழுதெல்லாம் கழிக்க வேண்டாம்
வேலைவெட்டி இல்லாதார் நட்பே வேண்டாம்
பேணாது பொருள்தன்னை அழிக்க வேண்டாம்
பிறர்பொருளை கேட்காமல் தொடவே வேண்டாம்


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 16, 2017

மனிதா மனிதா ஏமனிதா-நாளை மரணம் வந்தே நெருங்குமுன்னே!



மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்


பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
  
புலவர்  சா  இராமாநுசம்