Friday, April 14, 2017

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!



இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்

எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே

ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை

இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே

ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா

புலவர் சா இராமாநுசம்

Thursday, April 13, 2017

மீண்டும் தமிழ்மணம் பழையபடி-பட்டியல் முறையின்றி வரவே வருந்துகிறேன்!


மீண்டும் தமிழ்மணம் பழையபடி-பட்டியல்
       முறையின்றி வரவே  வருந்துகிறேன்
வேண்டி  கவிதை முன்பேநான்-கூறி
       விண்ணப்பம் செய்திட கண்டேதான்
திருந்திய  நிலையில்  வந்ததுவே-தூயத்
        தேனென  இனிமை  தந்ததுவே
வருந்தவே  ஆனது  பழைபடி-மீண்டும்
         வருமா பார்போம்  முறைப்படி!

புலவர்    இராமாநுசம்

Wednesday, April 12, 2017

கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன் கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!



கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
நிம்மதி ஏற்பட செய்வீரா?


பட்டப் பகலில் நடக்கிறதே-பெரும்
பணமே கொள்ளை! அடிக்கிறதே!
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறதே!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!

புலவர் சா இராமாநுசம்