Saturday, March 18, 2017

தேசியம் என்றாலே பொருளறிய தாரே தேசியம் பேசுவதா திருத்துவது யாரே!



தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்டவும் குனிவதா கேலியவர் பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்பெனும் தீமிகப் பற்றி


எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றியே கொடுத்தமே வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சமே இன்றியே அனைவரும ஓட
மேதினி முற்றுமே நம்புகழ் பாட

புலவர் சாஇராமாநுசம்

Thursday, March 16, 2017

ஊடகத்தாற் உண்மைகளை எழுத மாட்டார்-மக்களோ ஊமைகளாய் வாய்பொத்தி எதிர்ப்பு காட்டார்!



ஏடெடுத்தேன் ஏதேனும் எழுத எண்ணி- ஆனால்
இதயத்தில் எண்ணத்தில் குழப்பம் பண்ணி!
நாடகத்தில் காணுகின்ற காட்சி போன்றே-நாட்டில்
நடக்கின்ற அவலங்கள பலவும் தோன்ற!
காடகத்தில் வாழ்கின்ற உணர்வே பெற்றேன்-மாறும்
காலம்வரல் கானல்நீர்! அறிய லுற்றேன்!
ஊடகத்தாற் உண்மைகளை எழுத மாட்டார்-மக்களோ
ஊமைகளாய் வாய்பொத்தி எதிர்ப்பு காட்டார்!


புலவர் சா இராமாநுசம்

Monday, March 13, 2017

நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை-பலவும் நாளும் கண்டே தொகுத்தனை!



நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை-பலவும்
நாளும் கண்டே தொகுத்தனை
ஏட்டில் கவிதை என்றேநான் -ஆய்ந்து
எழுதிடக் காண்பீர் ஒனறோதான்!

வாட்டி வதைக்கும் செய்திபல-இங்கே
வழங்கும் ஊடகம்! நாளும்சில
காட்டில் வாழும் மிருகமென-நடப்பில்
கருதிட மனிதர் பெருகபல!

வீட்டில் நடக்கும் கொடுமைகளே-எடுத்து
வெளியிட இயலா அடிமைகளே
மீட்டிட முடியா பெண்னினமே-போதை
மிதப்பொடு வாழும் ஆணினிமே!

புலவர் சா இராமாநுசம்