Saturday, January 14, 2017

புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே?



புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில்
புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே
சத்தான நீரின்றி நாடு முழுதும்-பயிர்
சாவியே! உழவன்தன் குடும்பம் அழுதும்
நித்திரை கலையாத அரசுகளே ஆள-அந்த
நிலைகண்டு தாளாத பல்லுயிர் மாள
இத்தரை தன்னில் நாம்காணும் காட்சி-ஏக
இந்தியா என்பதின் மாண்புறு மாட்சி!


புலவர் சா இராமாநுசம்

போகி விழா கவிதை!



வேண்டாத பொருள்களையே வீட்டை விட்டே
வீசியதை விடிகாலை அனலில் இட்டே!
ஆண்டாண்டு காலமாக போகி என்றே
அழைத்திட்ட உழவனவன் அழுது இன்றே
பூண்டோடு பூண்டாக பயிரும் மாய!
பசியோடு இல்லத்தில் வயிரும் காய
கூண்டோடு அழிவானோ தெரிய வில்லை!
குடும்பத்தில்! துயருக்கு எதுதான் எல்லை!?


புலவர் சா இராமாநுசம்