Friday, December 8, 2017

பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே!



தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொலையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவளோ
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முகத்தின்
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-எனது
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினமே
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவளும்
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் னுடை
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என்னின்
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே  கவிப்பெண்ணே-தீராப்
பழியும் வருமுன்  வாயின்னே

புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. அழகிய கவிதை புலவர் ஐயா.. அது சரி யார் இந்தப் பெண்:)).. வோட் போட்டிட்டேன்ன்..

    ReplyDelete
  2. கவிதை வழியே ஆறுதல் கொள்ளுங்கள் ஐயா மனதை வருடியது வரிகள்
    த.ம.2

    ReplyDelete
  3. அருமையான கவிதை புலவர் ஐயா!!

    தம3

    ReplyDelete
  4. அனைவருக்கும் பொருந்துகின்ற, தேவையான கவிதை.

    ReplyDelete
  5. மனதின் எண்ணங்கள் கவி வரிகளாய்... அழகு.

    ReplyDelete
  6. நல்ல கவிதை புலவர் ஐயா.

    ReplyDelete
  7. அய்யாவுக்கு பத்தரை பென்னாவது உத்தரவாதமா இருக்கிறது. எனக்கு ஏழரை பெண்ணாகவுல்ல இருக்கிறது அய்யா...

    ReplyDelete
  8. மன ஆழத்தின் வரிகள் அருமை ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...