Tuesday, December 5, 2017

எங்கே போனாய் நிம்மதியே-உனையே எண்ணிக் கலங்குது என்மதியே!



எங்கே போனாய் நிம்மதியே-உனையே
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நானும்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-பட்ட
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீயும்
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என்றே
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அன்னார்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வியே
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீயும்
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்றே
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருளே
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்

12 comments:

  1. அருமை ஐயா இன்று பலபேரின் வாழ்வும் இதேநிலைதான்.

    எண்ணங்களின் தொடக்கமே தவறாக இருக்கிறது முடிவும் அதேநிலைப்பாடு.

    த.ம.பிறகு

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது ஐயா..ஆனால் நாம் நேர்மறை எண்ணங்களை விதைத்துக் கொண்டால் நிம்மதி தொலையாமல் இருக்கமல்லவா?! ஒரு சில விஷயங்களை நாமேதான் இழுத்துவிட்டுக் கொண்டு நிம்மதியைத் தொலைக்கின்றோமோ!?

    முதல் வரி உனையே என்பதற்குப் பதில் உனை என்று வந்தால் இன்னும் பொருந்தி வருமோ.../உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
    உன்னைக் காணா தழுவான்தான்/இதுவும் கொஞ்சம் இடிக்கிறதோ...ஐயா எனக்குக் கவிப்புலமை கிடையாது. ஆனால் வாயால் சொல்லிப் பார்க்கும் போது தோன்றியது...தவறு இருந்தால் மன்னிக்கவும்..

    கீதா

    ReplyDelete
  3. தாளம் போட்டுச் சொல்லிப் பார்ப்பது வழக்கம். அப்படி எழுந்ததுதான்...ஐயா.

    கீதா

    ReplyDelete
  4. அழகிய கவிதை...

    நிம்மதி நிம்மதி உங்கள் சொய்ஸ்..
    இன்பமும் துன்பமும் உங்கள் சொயிஸ்..

    அதனால கடந்ததை எண்ணிடவும் கூடாது.. எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படவும் கூடாது.. இன்றை நினைத்து மகிழ்ந்திருப்போம்ம்.. தமிழ்மணம் டச்சுப் பண்ணிட்டேன்ன்ன்ன்:)..

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் கடவுளோடு நான் உரையாடியதைப் பதிவில் எழுதுஇ இருந்தேன் அதை வாசிக்க அழைக்கிறேன்
    http://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_16.html

    ReplyDelete
  6. நல்ல கவிதை. பலரும் நிம்மதி நாடியே இருக்கிறோம் ஆனாலும் இருக்கும் இடம் தான் புலப்படவில்லை.

    ReplyDelete
  7. நிம்மதி என்பது மாந்தரின் மனதைப் பொறுத்தது. உழவர் வாழ்வின் நிம்மதியின்மை வேறு ரகம்.

    ReplyDelete
  8. எதை செய்து கொண்டிருந்தாலும் மனதின் ஓரத்தில் தோன்றும் வார்த்தையாகி போனது இன்று அருமையாக வடித்து இருக்கிறீர்கள் ஐயா

    ReplyDelete
  9. அமைதியில்லா என் மனமே - என்று பாடத் தோன்றுகிறது.

    ReplyDelete
  10. வெறும் புலம்பலே கவிதையா? ஒரு முடிவு சொல்லவேண்டாமா? முடிவு எனக்குத்தெரியாது என்று சொல்லலாம். ஆனால் நம்பிக்கை தரும் சொல்லாவது இருக்கக்கூடாதா?

    இறைவன் எல்லாருக்கும் கொஞ்சமாவது அறிவைத்தந்தே படைத்திருக்கிறான். அதை common sense or native intelligence. அதை ஒழுங்காகப் பயன்படுத்தினால் நிம்மதியை நாம் தேடவேண்டியதும். அது வந்து குடியிருக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் தேவையில்லை. அது வந்தாலென்னெ போனாலென்ன? நமக்கு நாமே இராஜா என்று வாழமுடியும். ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திக்க பழகிக்கொள்ளவேண்டும். சிந்தனை நிறைந்து அதை நன்கு பயன்படுத்தி வாழ்ந்தால் நன்று. நிம்மதி எப்போதுமே இருந்தும் தொலைக்ககூடாது என்பார் ஷா. (Satisfaction is death!) இருந்தால் என்னவாகும்? சோத்தால் அடித்த பிண்டமாவான் !!

    ReplyDelete