பட்டே அறிவது பட்டறிவு-எதையும்
பகுத்து அறிவதும் பகுத்தறிவே !
தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
தொட்டு அறிவது பட்டறிவு
விட்டால் குழந்தை தொடுமென்றே-நாமும்
விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
கெட்டோம் அறிவது பகுத்தறிவு
ஆய்ந்துப் பார்த்தல் பகுத்தறிவு-தந்திடும்
அநுபவம் அனைத்தும் பட்டறிவே
மாய்ந்து போமுன் மனிதர்களே—இதையும்
மனதில் கொள்வீர் புனிதர்களே
வாய்ந்தது துன்ப வாழ்வென்றே-நாளும்
வருந்தி நிற்றல் தீர்வன்றே
ஓய்ந்து போகா உளம்பெற்றே-பகுத்து
உணரின் வாழ்வீர் நலம்பெற்றே
சொன்னவர் யாராய் இருந்தாலும்-அவரே
சொன்னது எதுவாய் இருந்தாலும்
சின்னவர் பெரியவர் என்பதில்லை-அதையும்
சித்திக்க முயல்வது தவறில்லை
என்னவோ எதுவென மயங்காதீர்-பகுத்து
எண்ணியே ஆய தயங்காதீர்
இன்னார் இனியர் பாராதீர்-எதையும்
எண்ணாமல் என்றும் கூறாதீர்
சித்தர் பாடல் பட்டறிவாம் -முன்னோர்
செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவரின்
போதனை அனத்தும் அதன்விளைவாம்
உத்தமர் காந்தியின் பட்டறிவே-சுதந்திர
உரிமைக்கு விதையென நாமறிவோம்
எத்தகை செயலுக்கும் பட்டறிவே-ஆமென
என்றும் ஆய்தல் பகுத்தறிவே!
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா அற்புதமான வார்த்தைக்கோர்வை மிகவும் இரசித்து, மீண்டும் மீண்டும் படித்தேன். நன்றி
ReplyDeleteத.ம.பிறகு
த.ம.1
Deleteஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...
ReplyDeleteமிகவும் அருமை ஐயா
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteதமய +1
அருமை ஐயா.
ReplyDeleteபட்டே அறிவது பட்டறிவு. ரசித்தோம் ஐயா.
ReplyDelete