Saturday, November 4, 2017

சிந்தனை செய்வீர் மானிடரே-இதை செவியில் ஏற்றால் ஏனிடரே!




சொந்தம் என்றே ஏதுமிலை –சிலர்
   சொல்லும் சொற்களில் பொருளில்லை
பந்தம்  பாசம் எல்லாமே-பெரும்
    பணமும் வந்தால் சொல்லாமே
அந்தம் ஆகிடும் அறிவீரே-இந்த
    அவனியில் நடப்பதாம் புரிவீரே
சிந்தனை செய்வீர் மானிடரே-இதை
    செவியில் ஏற்றால் ஏனிடரே

பிறந்த உடனே அழுகின்றோம்-இனி
   பிறவா நிலைதர தொழுகின்றோம்
இறந்தால் மண்ணொடு கலக்கின்றோம்-அது
   இயற்கை என்றே உரைக்கின்றோம்
சிறந்தார் இவரெனச் செப்பிடவே-நம்
   செயலைக் கூறியே ஒப்பிடவே
மறைந்தார் அடடா இன்றென்றே-மக்கள்
    மதிக்க மறைதல் நன்றின்றே


வந்தவர் அனைவரும் போவதுவே-இயற்கை
    வகுத்த நிலையென ஆனதுவே
நிந்தனை பேசிட ஏதுமில்லை-இங்கே
    நிலையென இருப்பவர் எவருமில்லை
சந்தையில் கூடும் கூட்டமென-மனித
    சரித்திரம் கலைந்து ஓட்டமென
மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
    மரணம் வரவும் வீழ்கின்றோம்


இதுதான் வாழ்க்கை இன்றுவரை-இதில்
    ஏற்றமும் தாழ்வும் வருமேமுறை
எதுதான் வாழ்வென அறிவோமே-அதில்
    ஏற்புடை தன்னை ஏற்போமே
மதிதான் நல்வழி கண்டிடவும்-நம்
   மனமே அவ்வழி விண்டிடவும்
விதிதான் வலிதென ஆயாதீர்-வரும்
   வினையெனச் சொல்லி ஓயாதீர்

                       புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. உண்மை நிலை அறிந்து நல்வாழ்வு வாழ்வோம்.

    ReplyDelete
  2. உண்மை ஐயா உணர்வோம் இணைந்தே...

    ReplyDelete
  3. உங்கள் வாழ்வியல் சிந்தனைகள் வரிவரியாய் வந்து விட்டன அய்யா.

    ReplyDelete
  4. உண்மை தான் ஐயா. சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    த.ம. +1

    ReplyDelete
  5. உண்மையே! வரிகள் அருமை ஐயா

    த ம 5

    ReplyDelete
  6. எல்லாமே சரிதான்

    ReplyDelete
  7. வாழ்க்கையில் வேண்டிய எண்ணங்கள்
    தங்களால் தூண்டிய உண்மைகள்
    சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  8. அருமை அய்யா ..
    நிதர்சனம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...