Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினப் பாடல்



சின்னஞ் சிறுக்குழவி
  சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
  களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
  அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
   தாலாட்டு பாடுவளாம்

பூவின் இதழ்போல
   பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
   நறுந் தேனைதடவிட
பாவின் பண்போல
   பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
   களிப்பாயே தேன்சுவையில்

கண்ணே நீ உறங்கு
  கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
  வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்காமல்
  வரைந்த நல்ஓவியமே
மண்ணை வளமாக்கும்
   மழைத்துளி யேநீயுறங்கு

கொஞ்சும் மழலைக்கோர்
   குழல்இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லியசீர்
    பாதத்தில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்ன மனம்
    அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந்திடுவாள்
   நீவளரும் வரையவளே

       புலவர் சா இராமாநுசம்

 

6 comments:

  1. பாடல் அருமை ஐயா இரசித்தேன்.
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. அழகிய பாடல்.. மீதான் 1ஸ்ட்டூஊ வோட்டுப் போட்டேன்ன்:).

    ReplyDelete
  3. கொஞ்சும் மழலை பாடல் அழகு

    ReplyDelete