Thursday, September 21, 2017

இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!



கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
    கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
   தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
    ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்பட அறிவீரா? -உடன்
    நிம்மதி ஏற்பட செய்வீரா?

பட்டப் பகலில் வீடெங்கும்-நகையோ
    பணமோ கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!


வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
     வாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

             புலவர் சா இராமாநுசம்

9 comments:

  1. அவரவர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை ,இதில் மக்களை யார் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள் :)

    ReplyDelete
  2. யார் காலை எப்ப வாரி விடலாம்? பதவியை காப்பாத்திக்க யார் காலை பிடிக்கலாம்ன்னு இருக்கவுங்களுக்கு இதுக்குலாம் ஏது நேரம்

    ReplyDelete
  3. நிலை மாறட்டும். சீக்கிரம். மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
  4. நாட்டில் இப்போது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  5. யாருக்கும் வெட்கமில்லை ஐயா
    த.ம.பிறகு

    ReplyDelete
  6. நிலைமை மாற வேண்டும் ஐயா
    தம +1

    ReplyDelete
  7. மக்கள்தான் சுயநல சிந்தனை தூக்கி எறிய வேண்டும்

    ReplyDelete
  8. யார் எப்படிக் குரல் கொடுத்தாலும்.... உலகம் மோசமாகவே போய்க் கொண்டிருக்கு பல விசயங்களில்..

    8ம் வோட்ட்:).

    ReplyDelete
  9. கோடாலியை காலில் போட்டுக்கொண்டு ‘வலிக்கிறது. வலிக்கிறது.’ என்று சொல்லி என்ன பயன் ஐயா? வாக்களித்த நாம் அனுபவிக்கத்தான் வேண்டும் அடுத்த தேர்தல் வரும் வரை.

    ReplyDelete