Thursday, July 6, 2017

நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்! அதனால் அத்தொல்லை!




நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ
நினைவுகள்! அதனால் அத்தொல்லை!
மாற்றி மாற்றி வந்தனவே-மேலும்
மனதில் குழப்பம் தந்தனவே!
ஆற்ற முயன்றும் இயலவில்லை-ஏனோ
அறவே சற்றும் துயிலவில்லை
காற்றில் பறக்கும் இலைபோல-வீணே
கட்டிலில் புரண்டேன் அலைபோல!



எத்தனை மனிதர்கள் வந்தார்கள்-என்
எண்ணத்தில் காட்சித் தந்தார்கள்!
பித்தராய்க் கண்டேன் சிலபேரை-தற்
பெருமையே பேசும் சிலபேரை!
சித்தராய்க் கண்டேன் சிலபேரை-நல்
சிந்தனை ஆளர்கள் சிலபேரை!
புத்தராய்க் கண்டேனே சிலபேரை-எதிலும்
பொறுமை இல்லார் சிலபேரை!


எண்ணம் இப்படி சிதறிவிடும்-என்
இதயம் அதனை உதறிவிடும்
வண்ணம் பலவழி முயன்றாலும்-முடிவில்
வந்தது தோல்வியே என்றாலும்
கண்ணை மூடியே கிடந்தேனே-இரவு
காலத்தை அவ்வண் கடந்தேனே!
உண்மை நிலையிது உரைத்தேனே-அந்த
உணர்வினைக் கவிதையில் இறைத்தேனே!

விடிந்தது இருளும் ஓடிவிட-நெஞ்சில்
விளைந்தநல் அனுபவம் பாடிவிட
முடிந்தது வலையில் ஏற்றிவிட-உங்கள்
முன்னே இன்றும் தவழவிட
வடிந்தது வார்த்தையாம் இப்பாலே-நான்
வணங்கும் தாய்த்தமிழ் கவிப்பாலே!
படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள்
படித்திட தந்தேன் அலைவானில்!

புலவர் சா இராமாநுசம்

15 comments:

  1. உறக்கம் இழந்தது எங்களுக்கு கவிதை கிடைக்க வேண்டும் என்பதாலோ....
    மனம் அமைதி கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  2. இனி நிம்மதியாய் தூக்கம் வரும் அய்யா :)

    ReplyDelete
  3. அருமை ஐயா! இனி நிம்மதியாகவே.

    ReplyDelete
  4. உடல் + மன நலம் முக்கியம் ஐயா...

    ReplyDelete
  5. உறக்கம் வராவிட்டால் என் மனைவி விநாயகர் அகவலும் கந்த சஷ்டி கவசமும் சொல்லச் சொல்வாள் சொல்லச் சொல்ல தூக்கம் வருமாம்

    ReplyDelete
  6. அருமை ஐயா
    உறக்கம் அவசியம் தேவை ஐயா
    உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்
    தம+1

    ReplyDelete
  7. உறக்கம் இப்படித் தான் சில சமயங்களில் வருவதே இல்லை!

    உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  8. உறக்கம் வரவில்லை என்றால் அடியேன் பிளாக் கமெண்ட்ஸ் போட ஆரம்பித்துவிடுவேன் ஒரு காலத்தில் ...

    ReplyDelete
  9. தூங்காத இரவு தந்த கவிதை
    எம்மை சொக்க வைக்கிறது
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete