கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்
பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே
நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே
பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்
நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்
புலவர் சா இராமாநுசம்
///நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
ReplyDeleteநிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை///
இதுதானே ஐயா உண்மை நிலைப்பாடு வேறென்ன செய்வது ?
நல்ல கவிதை.
ReplyDelete"நல்லவர்கள் வரவேண்டும் " மக்கள் இதை தான் விரும்புவார்கள்.முடிகிற காரியமா?
அரசியலுக்கு வருபவர் எல்லோரும் ஒரே குட்டையில் மூழ்கும் மட்டைகளே
ReplyDeleteநல்லவர்க்கு நாட்டினிலே உள்ளதய்யா பஞ்சம்- நம்
ReplyDeleteநாடிருக்கும் நிலையுரைக்க வேகுதய்யா நெஞ்சம்
சொல்வதற்கும் நாதியின்றிப் போனதய்யா நாடு-ஊர்
சோறுமட்டும் போதுமென எண்ணியதால் கேடு
வல்லவர்கள் வகுப்பதுவே ஆகுதிங்கு வாய்க்கால்- நாம்
வாய்மூடி எப்போதும் ஒதுங்குகிற போக்கால்
கல்லெனவே மனங்களெல்லாம் ஆகிவிட்ட பின்னால்-இனி
கடவுளும்தான் வருவானோ நிலைமைதனைச் சொன்னால்?
மக்கள் இப்போது இவர்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஐந்து வருடங்கள் முடிவதற்காகக் காத்திருக்கவேண்டும்!
ReplyDeleteநாம் செய்யும் ஒரு நிமிட தவறுக்கு ஐந்து வருட தண்டனை....
ReplyDeleteநல்லவர்கள் வருவதும் கடினம்
ReplyDeleteவந்தால் பொதுமக்கள் ஆதரிப்பதும்
கஷ்டம் எனும் மோசமான
சூழலுக்கு அரசியல் போய்விட்டது
ஆயினும் நல்லதே நேரும் எனவே நம்புவோம்
வேறு வழி ?
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் விருப்பப்படி நல்லவர்கள் வந்தாலும் நூலைப்போல் சேலை என்பது போல மாறி விடுவார்கள் அய்யா.......
ReplyDelete