Wednesday, July 12, 2017

நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே!



புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
           போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!


பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
          பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்!
  நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
          நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்!
  வாயெடுத்து  சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
           வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்றே!
  தாயெடுத்து அணைக்காதக் குழந்தை போல-ஐயா
         தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால!


  நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
           நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே!  
  சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
         செப்பினால்  நாங்களும் அதனைக் கண்டே!
  தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
           தகராறு வேண்டாமே! வயிறும் மூட!
  இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
         இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்!


   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
            மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
   கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அடடா!
            கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்!
    அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
            அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
    படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
             பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!

புலவர்  சா  இராமாநுசம்

8 comments:

  1. மூட்டையார் ரொம்ப படுத்துறாரோ!

    ReplyDelete
  2. மூட்டையாரைப்பற்றிய கவிதை விண்ணப்பம் அருமை ஐயா

    ReplyDelete
  3. படிப்பைக் கூட கெடுக்கும் அளவுக்கு மூட்டையார் படுத்துறாரோ:)

    ReplyDelete
  4. அன்று மூட்டையார் இன்று கொசுவார்,

    ReplyDelete
  5. என்றும் தொல்லை தான் ஐயா...

    ReplyDelete
  6. ஹிந்தியில் மூட்டைப்பூச்சிக்கு ஒரு பாடல் உண்டு... அது நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  7. மூட்டைப்பூச்சி பற்றிய கவிதை அருமை ஐயா !

    ReplyDelete