Friday, June 9, 2017

பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல் நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ




எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!


ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

                                        புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்திற்கு தமிழ் என்ன செய்யும்! அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரச பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் இனி என்று சட்டம் வரப்போகுதாமே...

    ReplyDelete
  2. ஆதங்க கவி அருமை ஐயா மாற்றம் வரும் என்றே நம்புவோம்
    த.ம.1

    ReplyDelete
  3. வணக்கம் புலவர் ஐயா !

    வண்ணக் கனவில் வழிதவறும் மானிடத்தின்
    எண்ணத் தணையும் இடர் !

    கவலைகள் நம்மோடுதான் ஐயா பணமுள்ளவர்க்கு பண்பாடு மொழி அவசியமில்லை

    ReplyDelete
  4. # அரச பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் இனி என்று சட்டம் வரப்போகுதாமே..அரசு பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் இனி என்று சட்டம் வரப்போகுதாமே..#
    வாங்கிய லஞ்சப் பணத்தை எப்படித்தான் செலவளிப்பார்களோ :)

    ReplyDelete
  5. கல்வி வியாபாரமாகி பல வருடங்கள் ஆகி விட்டன ஐயா...

    ReplyDelete
  6. அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
    சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
    ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
    வேண்டும் வழிதான் விளம்பு!

    இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு
    தமிழ் ஆளுமென நம்புவது?

    ReplyDelete
  7. இந்த நிலை மாறும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.

    ReplyDelete
  8. ஆட்சிக்கு வரும் முன்புதான் தமிழைப் பற்றிக் கவலைப்படுவார்கள். அதன்பிறகு காந்தியடிகளைப் பற்றித்தான் கவலைப்படுவார்கள். ('காந்தியடிகள்' என்றால் பண நோட்டில் சிரிக்கும் பொக்கைவாய்க்கிழவரைச் சொன்னேன்!) - இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    ReplyDelete