இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்
இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்
அன்னையவள் தாரமவள் மறந்தா? போனேன்!
குன்றன்ன துயர்தன்னை நெஞ்சில் உற்றேன்-ஆனால்
குறைதீர இருமகவை நானும் பெற்றேன்!
நன்றென்னைக் காக்கின்றார் எனதுப்
பெண்கள்-என்றும்
நலன்பேண நான்காணும் இரண்டு கண்கள்!
செம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ!-தனிமை
சிறைபட்டு கிடக்கின்றேன்
நானும் இன்றோ!
வெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்
வேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால!
அம்பலமே இல்லாத ஆடல் தானே-இன்று
ஆயிற்றே என்நிலையும்! வாழ்தல் வீணே!
எம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்
எல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்!
துடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா
தொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்!
பிடிப்பில்லா வாழ்கையிது! எதற்கு வேண்டும் –மனம்
பேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்!
நடிப்பிப்லா நாடகமே என்றன்
வாழ்வே –நான்
நடைப்பிணமே! விரைவாக வருமா வீழ்வே!
இடுப்புள்ள கைபிள்ளை ஆனேன்
இன்றே –இனி
இறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே!
புலவர் சா இராமாநுசம்
மனம் அமைதி கொள்ளுங்கள் ஐயா
ReplyDeleteஉங்கள் மனநிலை புரியுதுப்பா
ReplyDeleteமனதில் அமைதி வேண்டி இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அய்யா.
ReplyDeleteபுரிகிறது, அவ உங்கள் கூடவேதான் இருப்பா.. எங்கும் போக மாட்டா...
ReplyDeleteதுணைவியவள் தூர நின்றாலும்
ReplyDeleteதங்கள் பயணம் வெல்ல - உள்ளத்தில்
துணையாக நிற்பவளும் அவளே!
துணைவியவள் இல்லையென்றால் தாங்க முடியா துயரம்தான் ,காலத்தின் கட்டாயமிதை யாரால் தடுக்க முடியும் அய்யா :(
ReplyDeleteஎன்னுடைய தந்தை பட்ட துயரம் கண்டிருக்கிறேன் என்பதால் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா.
ReplyDeleteதோன்றாத்துணையாக அவர் என்றும் உங்களோடு வாழ்வார் என்பது உறுதி.
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
ஈடுசெய்ய இயலாத
ReplyDeleteபேரிழப்பை கவியாகத் தந்தது
மனம் கனக்கச் செய்து போகிறது
நிச்ச்யம் இது ஆறுதலுக்கு அடங்கா துயரமே
வணக்கம்
ReplyDeleteஐயா
மன அமைதி கொள்ளுங்கள்... ஆண்டவன் துணை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் மன அமைதிக்குப் பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteபேரிழப்பு தான் ஐயா.
ReplyDeleteஉங்கள் மன அமைதிக்கு எனது பிரார்த்தனைகள்.