Wednesday, March 29, 2017

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென!



ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

12 comments:

  1. துறவி ஆட்சிக் கட்டிலில் ஏறும் நாடு ஐயா இது

    ReplyDelete
  2. மக்கள் மனதில் மாற்றம் வராதவரை இப்படித்தான் ஐயா
    த.ம. 1

    ReplyDelete
  3. கோடி கிடைக்கும் என்றால் கொத்தடிமையாய் கூட அடைந்து கிடக்கும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் காலமாச்சே !திருந்துவார்களா அய்யா:)

    ReplyDelete
  4. ஆதங்கமான கவிதை. அது (துறவு) அங்கே வரலாறு. ஆனால் அது இங்கே வராது.

    ReplyDelete
  5. துறவி வேஷம் போட்டவர்கள் அரசு கட்டிலில் அமரும் நாடு இது

    ReplyDelete
  6. துறவிகளாவது நல்லாட்சி தருவார்களா என்று ஏங்குகிறது மனம்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  7. "நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
    நாளும் மக்கள் அதைப்பேசி
    நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
    நீங்கா வேதனை மனதூன்றி" என்பது
    தமிழ் நாட்டில் மட்டுமல்ல
    ஈழத்திலும் இதே நிலை தான்!
    நல்ல கவிதை
    உலகெங்கும் பொருந்துமே! - அதற்கு
    தங்கள் கவிதை
    நல்லதோர் எடுத்துக்காட்டு!

    ReplyDelete