Saturday, October 29, 2016

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும் ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்!



காவேரிக்காக அறவழி போராட்டம்!
-----------------------------------------------
உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும்
ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்
பொறுமைக்கும் அளவுண்டாம் எண்ணிப் பாரீர் –துயர்
போக்கிட ஒன்றென திரண்டு வாரீர்


மூத்தாரா இளையாரா பேதம் வேண்டாம் –தன்
முனைப்பிங்கே அணுவளவும் அறவே வேண்டாம்
காத்திட வேண்டாமா நமது உரிமை –இதைக்
கண்ணென எண்ணுதல் ஆமே! பெருமை

அழுதாலும் தவறென்று சொல்லி நம்மை -இனியும்
அடக்கிட அதிகாரம் முயலும் உண்மை!
எழுவீரா தொழுவீரா எண்ணிப் பாரீர் –நம்மின்
எதிர்கால நிலையெண்ணி திரண்டு வாரீர்!

சிதறிய தேங்காயாய் இருத்தல் நன்றோ –உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இன்றோ!?
பதறியே எழுந்திட வேண்டும்1 அன்றோ!-மேலும்
பார்ப்பதா வேடிக்கை நாளும் நன்றோ!

தொடர்கதை ஆகுமுன் முடிவெ டுப்பீர் –எனில்
தூண்டிலில் மீனெனத் துடிது டிப்பீர்!
இடர்தனை நீக்கிட எண்ணிப் பாரீர் –ஒன்றாய்
இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, October 27, 2016

இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன் இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்


இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன்
இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்
பனிக்கின்ற கண்களுடன் கண்ணீர் சிந்த-நாட்டில்
பாராது கண்துயிலும் அரசோ! இந்த-நிலையில்
கனியிருக்க காய்தேடும் கயமை போன்றே—சற்றும்
கலங்காமல் தேர்தலிலே கருத்தை ஊன்ற-கண்டு
நனிதுயரில் வாடுபவன் பாடம் தருவான்-நாளை
நடப்பதை எண்ணிடுவீர் ! துயரம் மறவான்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...