Friday, July 15, 2016

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!


ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி வந்திட இக்கவிதை-ஐயா
நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
தேவை அளவே நீர்சேர்த்தே,
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரை-இவ்
உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
அகத்தில் அதனைக் கொள்வீரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்,
வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
தவறின் பஞ்சம் ஈண்டமே

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 13, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
ஓடாத கடிகாரத்திலே மணி, பார்த்தா அது யார்தப்பு! கடிகாரத்தின் தப்பா! பார்த்தவன் தப்பா!? ஆனால் வீணாக கடிகாரத்தை குறை சொல்வார்கள், இப்படித்தான் சிலர் தம்
குறையை உணராமல் அடுத்தவர்கள் மீது சுமத்துவார்கள்

எரியும் விளக்குக்கு எண்ணை ஊற்றினால்தானே மேலும் , எரிந்து கொண்டே இருக்கும்! இல்லை யென்றால் திரியும் எரிந்து ,அவிந்து தானே போகும்! அப்படித்தான் நாம் செய்யும் பணியும் , முயற்சியும் ஆகும்! நம் கவனம் சிதறினால் அனைத்தும் பாழாகி கெட்டு விடும்!

உறவுகளே !
பாதம் பூராவும் நெருஞ்சி முள் குத்தினாலும் பாதக மில்லை! துடைத்துவிட்டு மேலே நடக்கலாம்! ஆனால் குத்தியது வேலி காத்தான் முள் என்றால் !!? அப்படியே விடமுடியுமா! அது, விடமாயிற்றே !பாதத்தை பாதுகாக்க உரிய முறையில் ஆவன செய்யத்தானே வேண்டும் !அதுபோல நம் வாழ்கையில் நாள் தோறும் பல நிகழ்வுகள் நடக்கின்றன , அவை களில் சிலவற்றை நெருஞ்சி முள்ளாக எண்ணி ஒதுக்கி விடலாம்! சில, வேலிகாத்த முள்ளா இருக்குமானால் சரிசெய்ய உரிய நடவடிக்கை உடன் எடுப்பதுதான் நன்று!

உறவுகளே!
மகளைப் பறி கொடுத்து விட்டு நொந்து நூலகிப் போன தந்தை
மகளின் ஒன்பதாம் நாள் காரியம் செய்ய சீரங்கம் சென்றால் , அங்கேயும் போய், ஊடக செய்தியாளர்கள் , அவரிடம் செய்தி சேகரிக்கவும் பேட்டிகாணவும் முயன்றது ஊடக தர்மம் தானா?

உறவுகளே!
சட்டமும் பாதுகாப்பும் எவ்வளவுதான் பலமாக அமைத்தாலும் தனி மனித ஒழுக்கம் குறையக் குறைய குற்றங்கள் கூடிக் கொண்டேதான் போகுமே தவிர குறைய வாய்பில்லை! எனவே, நாம் வாழும் சமுதாயத்தில் , தனிமனித ஒழுக்கத்தை வளர்க நாம் அனைவரும் தனது கடமையாக எண்ணி பாடுபட வேண்டும்.

உறவுகளே!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இப்தார் விருந்தில் கலந்து கொள்ள, நந்தம் பாக்கம் சென்ற போது. அவர் இல்லம் விட்டு(5.40 மணி,மாலை)கிளம்பி ,நிகழ்ச்சி முடிந்து இல்லம் திரும்பிச் செல்லும் வரை, சுமார் 2, மணி நேரத்துக்கு மேல் இருபுறமும் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது என்ற செய்தி உண்மையா!!? இது முதலவருக்குத் தெரியுமா? தெரியாது என்றே கருதுகிறேன்! இத்தகைய செயல்கள் மக்களுக்கு வெறுப்பே ஏற்படுத்தும்! என்பது முதல்வர் அவர்களுக்கு நன்கு தெரியும்! எனவே உடன் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக் அறிவுறுத்தி. இனியும் , இவ்வாறு நடக்காமல் செய்வது மேலும் பெருமை சேர்க்கும்!

புலவர்  சா  இராமாநுசம்