Thursday, April 21, 2016

நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!


நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்


புலவர் சா இராமாநுசம்

Tuesday, April 19, 2016

செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா!


செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

வருகின்ற தேர்தலில்
தருகின்ற வாக்கினை-ஆய்ந்து
தருவீரா நீங்கள் தருவீரா!
புரிவீரா நீங்கள் புரிவீரா -இனி

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

ஏமாற்ற இலவசம்
என்பதே! உணர்ந்துடன் –பதவி
தாமற்ற தருவதே உணர்வீரா!
நாமற்ற யாதென உணர்வீரா- உடன்
செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

தரமில்லா கூட்டணி
தகவில்லா காட்சிகள் நமக்கு
வரமல்ல! சாபமே அறிவீரா!
நிறம்மாறும் பச்சேந்தி! புரிவீரா!-என

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

புலவர் சா இராமாநுசம்

Monday, April 18, 2016

வாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால்ச


வாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து
வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால்
தாழ்வதும் உயர்வதும் அதுபோன்றே-ஆய்ந்து
தணிவதும் பணிவதும் மிகநன்றே
ஊழ்வினை என்றென எதுவுமிலை-எனவே
ஊக்கமாய் முயன்றால் ஏதமிலை
சூழ்வது எதுவும் இவ்வாறாம் – எடுத்துச்
சொல்வதென்! வாழ்வே செவ்வாறாம்


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 17, 2016

தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!


தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை
தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!
இனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்
இளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்!
பனிவிலக வெம்மைதரும் கதிரோன் போன்றே –எனைப்
பற்றிநின்ற துயர்படலம் விலகித் தோன்ற!
நனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ்
நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்!


புலவர் சா இராமாநுசம்