Saturday, March 12, 2016

வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்!



வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே


புலவர் சா இராமாநுசம்

Thursday, March 10, 2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே-கூட்டு எவரோடு எவரும் சேரட்டுமே!


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே-கூட்டு
எவரோடு எவரும் சேரட்டுமே
தன்னாலே வெளிவரும் மயங்காதே-ஓட்டு
தாக்கார்க்கு அளித்திடத் தயங்காதே
சொன்னாலும் அனைத்தையும் நம்பாதே-பின்னர்
சோகத்தில் ஐந்தாண்டு வெம்பாதே
முன்னாலே தெளிவாக சிந்திப்பீர்-தேர்தல்
முடிந்தபின்னர் யாரைத்தான் நிந்திப்பீர்!


காசுதனை வாங்கிட்டுப் போடாதீர்!-அதனால்
காலமெல்லாம் வறுமையிலே வாடாதீர்
மாசுதனை பழியாக ஏற்காதீர் –என்றும்
மறவாதீர்! வாக்குதனை விற்காதீர்
பேசுவது வாய்வார்த்தை சேவையாகும்-ஆனால்
பதவிவரின் பணமொன்றே தேவையாகும்
கூசுவது துளிகூட இல்லைநாக்கில்-பணத்தைக்
கோடிகளில் காண்பதுதான் உண்மைநோக்கில்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 9, 2016

வந்ததே தேர்தல் விளையாட்டே!


நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டிட  இந்த தமிழ்நாட்டில்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 7, 2016

முன்போல தமிழ்மணமும் வருவ தில்லை- பதிவை முறைப்படுத்தி முறையாக தருவ தில்லை!





முன்போல  தமிழ்மணமும்  வருவ தில்லை- பதிவை
      முறைப்படுத்தி     முறையாக தருவ தில்லை
என்போன்றார் பலபேரும்  ஏனோ யின்றே-வலையில்
      எழுதாது  போகின்றார்  அறியேன்  நன்றே
பொன்போலும்  பொருள்போலும்  போற்றி  வந்தார்-நாளும்
     போனாராம்! முகநூலில் பதிவே  தந்தார்
அன்போடு  வேண்டுகிறேன்  வருவீர்  மீண்டும் –எந்தன்
      அழைப்புக்கே செவிசாய்த்து தருவீர்  ஈண்டும்

புலவர்  சா  இராமாநுசம்