Saturday, March 5, 2016

நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல் நாடக ஒத்திகை பாருமிங்கே!




நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல்
நாடக ஒத்திகை பாருமிங்கே
வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள
வந்தவர் போடுவார் கொட்டமென
பல்லோரே சேருவார் கூட்டணியே- கொள்கை
பறந்திட தேடுவார் ஓட்டினியே
சொல்வாரே கூசாமல் நாக்குமின்றே-பணி
செய்திட நிற்பதாம் நோக்கமென்றே

தன்னலம் இல்லாதார் ஒன்றுகூடி-பெற்று
தந்தாராம் சுதந்திரம் போருமாடி
என்நலம் காப்பதாம் என்றேமனம்-நாளும்
எண்ணுவர் கைகளில் சென்றேதினம்
உன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்
உணராது இருப்பதும் தவறேயென
பொன்மனப் பெரியோரே உணர்ந்திடுவீர்-இந்த
போக்கினை நீக்கிட என்னவழி
நாளை பார்ப்போம்.......!

யாராள வந்தாலும்ஊழல்மட்டும்-இங்கே
உருவாகா நிலைகாணும் சூழல்மட்டும்
வாராது ஒருநாளும் உண்மையிது-கடந்த
வராலாறு காட்டிடும்தன்மையிது
சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
செய்வதே உண்மையில் நமதுகடன்
போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்


 கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
போட்டி கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
போடவும் தருகின்றார் நோட்டேபல
கேட்டிட யாரிங்கே நாதியில்லை-தட்டி,
கேட்டவர் பெறுவதோபீதியெல்லை
ஓட்டிட போகவே அஞ்சுகின்ற-நிலை
உள்ளதை எண்ணுவீர் கொஞ்சமின்றே

வந்ததேலாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்
சொந்தமாய் பிடியின்றி போவாரந்தோ-நல்
சுடுகாடும் இல்லாமல் ஆவாரந்தோ
சிந்தனை செய்திட வேண்டுமுடன்-என
செப்பியே மக்களை தூண்டுமுடன்
வந்தனை கூறியே முடித்துமிதை-நெஞ்சில்
வடிந்ததை கவிதையாய் தொடுத்துமிதை

                                    புலவர் சா இராமாநுசம்






Tuesday, March 1, 2016

வள்ளுவர் காட்டும் காதல் நுட்பம்!


உறவுகளே!
பெண்கள் தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்வதிலே உள்ள ஒரு நுட்பம் அவர்களுக்கே தெரியாத ஒன்றை வள்ளுவர் தன் குறளில் எப்படி விளக்குகிறார் பாருங்கள்!
கண்களுக்கு மை தீட்ட பெண்கள் ஒரு குச்சியில்(கோல்) மையைக் குழைத்து, தன் கண்களுக்கு அருகில் கொண்டு சென்று கண்ணை மூடி மை தீட்டுவார்கள் அதுபோது கோல் அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா! இதனை.....
பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை தலைவிக்கு கடுங்கோபம்! தோழியிடம் புலம்புகிறாள்! வரட்டும்! பேசமாட்டேன் விரும்பியல்ல, திரும்பிக் கூட பார்க மாட்டேன் என்பதுபோல, இன்னும் பல!
தோழி ஏதும் கூறாமல் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்! தலைவன் வருகிறான் தேர்வரும் சத்தம் தெருவில் கேட்கிறது! தலைவியிடம் பரபரப்பு! வாசலுக்கு ஓடி வருகிறாள்!தலைவன் இறங்குகிறான் கருத்து சற்று உடல் மெலிந்து காணப்பட்ட அவனைக் கண்டு தலைவி உருகி உருகி ஓடி ஓடி உபசரிக்கிறாள்! தலைவன் ஓய்வெடுக்க , அனைத்தையும் கண்டு கொண்டிருந்த தோழி தலைவியைப் பார்த்து ஏளனமாக சிரிக்க வெக்கப் பட்ட தலைவி சொன்ன பதில்!! வள்ளுவர் குறளில் ----!
தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட மை பற்றிய செய்திக்கு வருவோம்
குச்சியில் மையைக் குழைத் கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் வரை தெரியும் குச்சி ,கண்ணை மூடி மையைத் தீட்டும் போது தெரிவதில்லை!
அதுபோல , தலைவன் பிரிந்த ஏற்பட்ட வருத்தம் கோபம் எல்லாம் அவனை நேரில் கண்டதும் மறைந்து விட்டதே என்பதாம்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட விடத்து- குறள்
        பல பெண்களே அறியாத , நினைக்காத நுட்பத்தை வளுவப் பெருந்தகை , எடுத்து கையாண்டுள்ள சிறப்பு வியக்கத் தக்கதல்லவா!  மேலும்...


உறவுகளே!
           நான் எழுதிய கருத்தை உள்ளடக்கிய குறள்! இதோ, மற்றொன்று!
தோழி, கேட்பாயாக !தலைவனைக் நேரில் காணும் போது, அவர் செய்த தவறுகள் எதுவுமே தெரிவதில்லை! காணாத போது தவறுகளத்தவிர பிற தெரிவதில்லையே! என் செய்வேன் என்று புலம்புகிறாள்!
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை,- குறள்
 புலவர்  சா  இராமாநுசம்

Monday, February 29, 2016

முகநூல் பதிவுகள்!



முப்பால் என்று அழைக்கப்படும் , திருக்குறளில் காமத்துப்பால் பற்றி சில கருத்து வேறுபாடுகள் ,அதாவது காமம் என்றாலே அது ஒரு வெறுக்கத் தக்க சொல் என்பது போல பேசுவதுண்டு! ஆனால் வள்ளுவர் காதலைத்தான் காமம் என்று குறிப்பிடுகிறார் அவர் வாழ்ந்த காலத்தில் அதுதான் வழக் காறாக இருந்தன! அவர் காதலைப்பற்றி, அதன் உணர்வுகளை , எவ்வளவு நுட்பமாக நாகரிகமாக நயம்பட எழுதியுள்ளதை படிப் பவர் பாராட்டாமல் இருக்க இயலாது . நாளை முதல் அவை பற்றி ஆய்வோம்!

உறவுகளே!
வணக்கம்! நேற்று, நான் வள்ளுவரின் காமத்துப்பால் பற்றி எழுதியிருந்தேன்!அதனை மு.வ போன்ற அறிஞர்கள் இன்பத்துப்பால் என்று குறிப்பிடுகின்றார்களே ,என உறவுகள் சிலர் கூறியுள்ளனர் ! எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதானே! சொல்வதின் நோக்கம் காதலைத்தானே! அதாவது, போத்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போத்தினாலும் நோக்கம் போத்திக் கொள்ள வேண்டும் என்பதுதானே! 

   புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...