Saturday, January 16, 2016

திருவள்ளுவர் திருநாள் !


திருவள்ளுவர் திருநாள் !

தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்


சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

Friday, January 15, 2016

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை! தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்!


தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
மேதினி உணர்ந்திட இங்கே விண்டோம்


காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
விளைந்திட அறுவடைப் பொங்க லிட்டான்
மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
மனித நேயத்துக்கே வித்தி டுவான்
பாட்டுக்கே அன்னவன் உரிய வனாம்-தமிழ்ப்
பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!

உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
கைகள் முடங்கிடின் எதுவு மின்றே
மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
இயலாது! இயலாது !கண்டோ மன்றே-அந்த
ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
பயிலாதப் பெரும்பான்மை மக்க ளய்யா-உடன்
பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

புலவர் சா இராமாநுசம்

 வணக்கம் ! அனைவருக்கும்  இனிய  பொங்கல் வாழ்துகள்!

Thursday, January 14, 2016

நடக்கும் என்பார் நடவாதென்பார்-என்ன நாடகம் இதுவோ தெரியவில்லை!



நடக்கும் என்பார் நடவாதென்பார்-என்ன
நாடகம் இதுவோ தெரியவில்லை
கடக்கும் நாளே இன்னும் ஒன்றாம்-பின்பே
கபடம் வெளிப்படும் நன்றாம்

தேர்தல் வந்தால் தெரியும் தானே!-எதற்கு
தேடல் விடையும் வீணே
பார்தனில் அடடா பதவிப் பெறவே-கட்சிகள்
படுவதும் சொல்வதா அறவே

புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 12, 2016

ஆறுதலை சொல்வற்கு யாரும் காணோம் அஞ்சியஞ்சி வாழ்வதற்கு நாமும் நாணோம்!



கைநிறை  காசெடுத்துப்  போனால்  கூட
 காய்கறிகள் விலையந்தோ அதிகம்  ஓட
பைநிறைய  வில்லையெனில்  வாழ்தல் எங்கே
பல்பொருளும் இவ்வாறே  நாளும்  இங்கே

மத்தியிலே  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
மாநிலத்தை  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
புத்தியிலே  நமக்குத்தான்  என்றே  நொந்தே
புலம்புவதா மக்கள்தான்  உள்ளம்  வெந்தே

ஏறுமுகம் எப்பொருளும் நஞ்சைப் போன்றே
இனியென்றும் மாறாது  என்றே   தோன்ற
ஆறுதலை  சொல்வற்கு  யாரும் காணோம்
அஞ்சியஞ்சி  வாழ்வதற்கு  நாமும்  நாணோம்

புலவர்  சா  இராமாநுசம்


Sunday, January 10, 2016

முகநூல் பதிவுகள்!





பாரதிதாசன் நடந்து போகும் வழியில் ஒரு குளம் தாமரைப் படர்ந்த , நீர் நிறைந்து காணப்பட்டது அது கண்ணைக் கவரவே அருகே சென்று கரையில்
நின்று , சலனமற்று தெளிந்த நீரை கவிஞர் எட்டிப் பார்தார் அவர் முகம் நீரில் தெரிந்தது! ஆகா கண்ணாடித் தரை என்றார்! உற்றுப் பார்த்தார் எங்கும் தாமரை இலைகள்! கண்கவர் பச்சை தட்டுகள்! என்றார் !மேலும் உற்றுப் பார்க்க , தாமரை இலைமீது முத்துப் போல் நீர் துளிகள் !எண்ணாத ஒளி முத்துகள் இறைத்தது போல என்றார்! கவிதை பிறந்தது!
கண்ணாடித் தரையின்மீது கண்கவர் பச்சைத் தட்டு! எண்ணாத ஒளி முத்துக்கள் இறைத்தது போல் குளத்தில்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்! என்ற வாக்கியம் அனைவரும் அறிந்த ஒன்றே! இதில் கேளீர்என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்
ஒன்று கேளீர் என்பது உறவினர் என்றும் மற்றொன்று கேளீர் என்பது சொல்வதைக் கேட்பீர்களாக என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார்கள்
நீங்கள் எது சரி என நினைக்கிறீர்கள்!!?

எந்தக் குடியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அக் குடியில் பிறந்த மூத்தாவனாக இருந்தாலும் வயதில் இளையவனாக,இருந்து படித்து அறிவுள்ள ஒருவனையே ஊரும் மதிக்கும் , வரவேற்கும், போற்றும் என்பதுதான் உண்மை!

பையன் நல்லாப் படிக்கிறான் என்றால் பெற்றவர்கள் மகிழ்வார்கள் !பையன் நன்றாக. குடிக்கிறான் என்றால்!! மகிழவா செய்வார்கள்?

புலவர்  சா  இராமாநுசம்