Thursday, November 24, 2016

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று???? பொருந்தும்!




அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!!
இன்று????  பொருந்தும்

மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!



சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!

உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!

வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!

புலவர் சா இராமாநுசம்

7 comments:

  1. சிறப்பான கவிதை மழை ஐயா
    த.ம.1

    ReplyDelete
  2. போதுமென்று சொல்லும் வரை கொட்டிய சென்ற வருட மழை நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  3. "வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
    வகுத்த குறளுக்கு நிகரேது!
    ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
    இன்றெனில் வாழ்வும் முறிதானே!" என
    அழகாய் உரைத்தீர்கள்!

    ReplyDelete
  4. நல்ல கவிதை. சென்ற வருடம் பெய்து கெடுத்தது. இந்த வருடம் பெய்யாமல்!

    ReplyDelete
  5. மழை வந்தாலே பயமாய் இருக்கும் சென்ற ஆண்டு அனுபவத்தால்

    ReplyDelete
  6. மாரிக் காலம் முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. ஆனால் மழை அறிகுறி ஏதுமில்லை . தங்கள் கவி மழை கண்டுதான் ஆறுதல் அடைய வேண்டும்

    ReplyDelete