Friday, July 15, 2016

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!


ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி வந்திட இக்கவிதை-ஐயா
நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
தேவை அளவே நீர்சேர்த்தே,
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரை-இவ்
உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
அகத்தில் அதனைக் கொள்வீரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்,
வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
தவறின் பஞ்சம் ஈண்டமே

புலவர் சா இராமாநுசம்

5 comments:

  1. அம்பலம் ஏற வேண்டும் அய்யா உங்களின் எச்சரிக்கை !

    ReplyDelete
  2. "உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
    உலக வாழ்வே முடங்கிவிடும்!
    வழுவே அறியா தொழிலன்றோ-வரும்,
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ!" என வரும்
    அடிகளை அனேகர் அறியாது இருக்க
    அரசுகள் எப்படி அறியும்?

    ReplyDelete
  3. அருமை... அருமையா எழுதியிருக்கீங்க...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete