Friday, May 6, 2016

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!


இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்
   இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்
   அன்னையவள் தாரமவள் மறந்தா?  போனேன்!
குன்றன்ன துயர்தன்னை நெஞ்சில்  உற்றேன்-ஆனால்
    குறைதீர இருமகவை நானும் பெற்றேன்!
நன்றென்னைக் காக்கின்றார் எனதுப் பெண்கள்-என்றும்
    நலன்பேண நான்காணும்  இரண்டு கண்கள்!

செம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ!-தனிமை
     சிறைபட்டு  கிடக்கின்றேன் நானும்  இன்றோ!
வெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்
    வேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால!
அம்பலமே இல்லாத  ஆடல் தானே-இன்று
    ஆயிற்றே என்நிலையும்! வாழ்தல் வீணே!
எம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்
    எல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்!

துடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா
    தொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்!
பிடிப்பில்லா வாழ்கையிது! எதற்கு வேண்டும் –மனம்
    பேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்!
நடிப்பிப்லா  நாடகமே என்றன்  வாழ்வே –நான்
    நடைப்பிணமே! விரைவாக  வருமா  வீழ்வே!
இடுப்புள்ள கைபிள்ளை  ஆனேன்  இன்றே –இனி
    இறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே!
                         
புலவர்  சா  இராமாநுசம்

8 comments:

  1. வணக்கங்கள்.

    உங்கள் நினைவுகளில் என்றும் இருப்பார்.

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா..அம்மாவின் இழப்பு தாங்கவியலா ஒன்றுதான்....நீங்கள் வேதனைப்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுவதை அம்மா விரும்ப மாட்டார்கள் தானே...என்றும் உங்களுடன் தான் அவரின் நினைவுகள் சூழ்ந்திருக்கும் அய்யா..

    ReplyDelete
  3. நினைவுகளோடு வாழுங்கள் ஐயா.

    ReplyDelete
  4. நினைவுகள் சுமந்து வாழும் வாழ்க்கை வலி நிறைந்தது என்றாலும் நினைவுகளோடு வாழுங்கள் ஐயா...

    ReplyDelete
  5. என்றும் நீங்கா நினைவுகளில் எஞ்சி இருக்கும் நாட்கள்

    ReplyDelete
  6. நினைவுகள் என்றும் அகலாது ஐயா.

    ReplyDelete
  7. துணைவியாரின் பிரிவின் வேதனையை உணர்த்தும் கவிதை...வாசிக்கும்போதே கனக்கிறது எங்கள் நெஞ்சம்.

    ReplyDelete