Friday, April 29, 2016

ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!



ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு என்றா ஆளும்!


பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

9 comments:

  1. கவிதை அருமை ஐயா அனைத்து மக்களும் உணர்ந்தால் நலமே....

    ReplyDelete
  2. தேர்தல்
    நாடகத்தில் இன்றுவரை! துயர் போகவில்லை ..அய்யா...

    ReplyDelete
  3. எந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பது

    ReplyDelete
  4. #பட்டதுயர் போதுமினி படவும் இயலா#
    உண்மைதான் அய்யா !

    ReplyDelete
  5. ஐயா.. யார் வந்தாலும் மக்களுக்குத் துன்பம்தான். நாட்டு மக்களுக்காக யாரும் ஆள வருவதில்லை. தம மக்கள், தம் செல்வங்களை உயர்த்திக் கொள்ளத்தான் படாத பாடு படுகிறார்கள்.

    ReplyDelete
  6. நன்றாக அலசி உள்ளீர்கள்

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    ReplyDelete
  7. வரிகளா...?
    இது வலிகளா...?
    அருமை ஐயா....!

    ReplyDelete
  8. அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete