Saturday, February 20, 2016

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி


நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே

பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
அவலந்தான் முடியாத தொடராக நின்றும்

புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. அருமை ஐயா சவுக்கடி வார்த்தைகள் ஆனால் இது வாக்காளர்களுக்கும் உரைக்க வேண்டும்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. நல்லவர்கள்தான் அரசியலுக்கு வர அஞ்சுகிறார்களே :)

    ReplyDelete
  3. பச்சோந்தி என்பது பச்சேந்தி என்று வந்து விட்டதா?

    மது விலக்கு தான் எங்களது முதல் கையெழுத்து என்று சொல்பவர்கள் அதை எப்படி அமல் படுத்துவார்கள், அதனால், ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு மேற்கொள்ளப்போகிறார்கள் என்று ஒரு வெள்ளை அறிக்கையை தமது தேர்தல் அறிக்கையுடன் தந்தால் நம்பகத்தன்மை கூடும்.

    நிற்க. இந்த நடைமுறையில் இருக்கும் அரசியல் கட்டமைப்பில் காசு இல்லாதவர் தேர்தலில் நிற்கவோ ஜெயிக்கவோ வழி இல்லை. அந்தக் காசு புதியதாக, அதிகமாக, வரும் வழி தெரிந்தவர் தாமே இருக்கும் காசை செலவழிக்கவும் துணிகின்றனர் இல்லையா !!

    கவிதை யதார்த்தம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. பொதுவாக நாட்டினிலே சூதாட்டம் என்றே- ஆன
    பொல்லாத அரசியலால் நொந்துவிட்டோம் இன்றே
    மதுவாலும் பொருளாலும் பெறுவார்கள் வாக்கு-பின்பு
    மதயானை போலாகும் தலைவர்களின் போக்கு
    புதுவெள்ளம் அரசியலின் மடைமாற்ற வேண்டும்- இதைப்
    புரிந்திங்கு மக்களுக்கும் மனமாற்றம் வேண்டும்
    எதுவேண்டும் எனத்தேர்ந்து அளிப்போமே ஒட்டு-நம்மை
    ஏய்ப்போர்க்கு வாக்காலே வைத்திடுவோம் வேட்டு

    ReplyDelete
  5. இலவசம் ஏனோ
    இவன் வசம் இல்லை...
    இவன் கண்களில் ஏனோ
    தூக்கமும் இல்லை...
    காரணம் தானோ
    சுயநலம் இல்லை...
    இவன் குருதி கொதிப்பதோ
    பொதுநலன் கருதி...
    குடும்பத்தின் கவலை ஒருபக்கம்...
    நாட்டு மக்கள் கவலை மறுபக்கம்...
    மக்கள் பஞ்சம் தீர்க்க
    இவன் நெஞ்சம் கதறும்...
    இவனே சிறந்த தலைவன்...




    இப்படி ஒரு தலைவன் வேண்டும்
    அப்போதே நம்நாட்டில் நல்லாட்சி ....

    ReplyDelete
  6. நல்லவர்களை அடையாளம் காண்பதே சிரமம்

    ReplyDelete
  7. இருக்கும் நல்லவர்கள் வந்தாலும்..இல்லாதவர் என்பதால் மக்கள் கூடி வருவதில்லை அய்யா.....

    ReplyDelete
  8. ஐயா, இதனை நாம் கனவில்தான் காணவேண்டும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. 'அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்'-
    அய்யா, வணக்கம். இந்த வரியில்தான் ஏராளமான செய்திகள் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக உள்ளன என்று நினைக்கிறேன். மிக அருமை, தொடர்ந்து உங்கள் கவி ஈட்டிகளைக் கூர்தீட்டி வீசுங்கள்..

    ReplyDelete