Friday, December 11, 2015

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை



எங்கு காணிலும் குப்பையடா-நம்
எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை


பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை தீரும் வழிகாண்பீர்-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 10, 2015

கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே!


கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

எண்ணிப் பாரும் நல்லோரே-நல்
இதயம் படைத்த பல்லோரே
கண்ணில் படுவது வீதியிலே-எங்கும்
காகித பிளாஸ்டிக் குப்பைகளே!
விண்ணில் காற்றில் பறந்திடுமே-வந்து
விரைவாய் முகத்தில் மோதிடுமே!
திண்ணிய முடிவும் எடுப்பீரா-குப்பை
தெருவில் போடவும் தடுப்பீரா!


வீட்டை சுத்தம் ஆக்குதும்-அள்ளி
வீதியில் குப்பையைத் தேக்குவதும்!
கேட்டை நாமே தேடுவதாம்-பிறர்
கேட்பினும் , அவரைச் சாடுவதாம்!
நாட்டைக் கெடுக்கும் நோயன்றோ-தொற்று
நோய்கள் பிறக்கும் தாயன்றோ!
கோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக்
கொடுமையை நீக்க இயலாதே!

தொட்டி இருக்கும் ஆனாலும்-கையில்
தூக்கிக் கொண்டு போனாலும்!
எட்டி நின்றே குப்பைகளை-தூக்கி
எறிந்து விட்டுச் செல்வாரே!
தட்டிக் கேட்பின் வைவாரே-அந்த
தவறே நாளும் செய்வாரே!
கொட்டிய குப்பையோ உதறிவிட-மிக
குறையின்றி வீதியில் சிதறிவிடும்!

சொன்னால் செய்பவர் சிலபேரே-எவர்
சொல்லினும் கேளார் பலபேரே!
தன்னால் உணர்பவர் இருப்பாரே-சிலர்
தனக்கென என்றும் போவரே!
முன்னாள் அனுபவம் பலவற்றை-இங்க
முறையாய் அதிலே சிலவற்றை!
என்னால் ஏதோ முடிந்தவரை-ஐயா
எழுதினேன் தருவீர் கருத்துரையே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 9, 2015

அன்பின் இனிய உறவுகளே!


அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! நான் நலமாக உள்ளேன்! என்பால் பேரன்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றி! கடந்த, நடந்த எதையும்
மீண்டும் நினைத்துப் பார்க்கவோ எழுதவோ விரும்ப வில்லை! ஆண்டவன் அருளும் உங்கள் அனைவரின் அன்பும் என்னை வாழவைக்கிறது என்பது மட்டும் உண்மை!!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, December 6, 2015

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!



பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
அழுதுகிட்டே மீன்பிடிக்கும் மீனவன் போல -அவன்
அல்லலுக்கு விடிவுண்டா என்றும் சால!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
பொழுதுமுட்ட குடிக்கின்றான் கவலை அகல –இல்லம்
போனபின்னர் அவன்செயலை எடுத்துப் புகல!
விழுதுகளாம் பிள்ளைகளும் மனைவி என்றே –படும்
வேதனையை விளக்குவதும் எளிதும் அன்றே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!

நஞ்சுண்ட விவசாயி கண்டோம் இன்றே –வரும்
நாட்களிலே நடக்குமிது காணும் ஒன்றே!
பஞ்சுண்டு நெய்வதற்கும் ஆலை யுண்டே –ஆனா
பலநாளாய் மூடியது அரசின் தொண்டே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
கஞ்சுண்டு வாழ்வதற்கும் தொட்டி கட்ட –அரசு
கருணையுடன் மானியமே நம்முன் நீட்ட!
நெஞ்சுண்டு நன்றிமிக வாழ்வோம் நாமே –பெரும்
நிம்மதியாய் அஞ்சலின்றி நாளும் தாமே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...