Saturday, October 31, 2015

நினைவும் கனவும்!


நினைவு!

கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை


புலவர் சா இராமாநுசம்

Thursday, October 29, 2015

வெண் மதியும் வீசும் தென்றலும்!


மதி!
விண்மீது தவழ்கின்ற வெண்மதியைப் பாராய்-இரு
விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!


தென்றல்!
தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

 
புலவர் சா இராமாநுசம்