Saturday, August 29, 2015

பெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ?




                    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து  உயிர்நீத்த செங்காடியின் 4ம் ஆண்டு நினைவு தினம்!  செங்கொடியின்  நினைவஞ்சலியாக அன்று  நான் எழுதிய கவிதை                      

           மீள்பதிவு!

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
   
பிரிந்து எங்கே போனாயோ!
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
   
வேலூர் சிறையில் நின்றாயா!
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
   
கதறி துயரில் விழுகின்றார்!
 
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனியே
   
எத்தனை உயிர்கள் மாள்வாரே!

 
வஞ்சம்  மட்டுமே உருவாக-மூவர்
     
வாழ்வைப் பறிக்கும் கருவாக!
 
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிரும்
    
நீங்கின் மீண்டும் வருமொன்றா!
 
தஞ்சம் அடைந்த  பறவைக்கும்-தனது
    
தசையைத் தந்தவன் தமிழனடா!
 
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீயும்
     
பற்றி எரியும் திட்டாதீர்!

 
முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாமே
    
முடங்கியா விடுவோம் ஆகட்டும்!
 
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
    
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு!
 
திடமாய் முடிவு  எடுப்பாராம்-அவரே
    
தினமும் அறப்போர் தொடுப்பாராம்!
 
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
    
விடத்தை அவரே தின்பாரா !

 
இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
   
இழந்தோம் செங்கொடி வீணாவே!
 
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
   
கோழையா நாமே தரைமுட்ட!
 
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிரைக்
   
காக்க தமிழரே உடன்ஒல்லை!
 
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவரின்
   
தூக்குக்  கயிற்றை அறுப்பீரே!

புலவர்  சா  இராமாநுசம்


Friday, August 28, 2015

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-நீரும் எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே!


எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-நீரும்
எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே!
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நாளும்
ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே!
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-எனது
சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே!
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே!


பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதையே
படிக்கின்ற மணவர் உணரவே கூறும்!
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதையே
வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்!
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி!
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்!

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினமே
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே?
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தமது
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்!
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல!
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை!

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினமே
சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே!
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
காரணம் யாருக்கும் புரியவே இல்லை!
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-என்றும்
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே!
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 26, 2015

பாழாக இயற்கைதனைச் செய்தோம் வீணே-அதனால் பருவநிலை மாறியது நம்மால் தானே!


பாழாக இயற்கைதனைச் செய்தோம் வீணே-அதனால்
பருவநிலை மாறியது நம்மால் தானே!
வாழாது இவ்வுலகம் இப்படிப் போனால் –நமது
வருங்கா சந்ததிகள் நாசம் ஆனால்!
சூழாதோ பெரும்பழியும் நம்மை வந்தே-தீரா
சோதனைகள் பலவாறு துன்பம் தந்தே!
வீழாது காத்திட முயல வேண்டும்-இதுவே
வேள்வியென செய்வோமே நாளும் ஈண்டும்!


அன்னையவள் இயற்கைதனை வாழ வைப்போம்-மேலும்
அழிக்காமல் வளர்வதற்கு வழிகள் காண்போம்!
இன்னலெதும் இல்லாது இயற்கை யோடும்-என்றும்
இணைந்தேநாம் வாழ்ந்தாலே வாராக் கேடும்!
கன்னலென இனித்திடுமே மனித வாழ்வே-இதனைக்
கருதாமல் நடந்தாலே வருதல் வீழ்வே!
பொன்னதனைக் காப்பதுபோல் காக்க வேண்டும்-எழில்
பூத்திடவே காடுகளை ஆக்க மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Monday, August 24, 2015

நிலைத்தது அண்ணா நுலகம்-உவகை நிறைந்திட மக்கள் அகம்!



நிலைத்தது அண்ணா நுலகம்-உவகை
நிறைந்திட மக்கள் அகம்!
அளித்தது நீதி மன்றம்- மேலும்
அழியாது காக்க என்றும்!
களித்திட ஆணை தந்தார்-நாளும்
காத்திட, படிக்க வந்தார்!
ஒளிதிகழ் வசதி பலவும்-அரசு
உடனடி செய்ய என்றார்!


நீதியும் வெல்லு மென்றே-காலம்
நீண்டாலும் காட்ட நன்றே!
சேதியாம் தீர்ப்பு ஒன்றே –எடுத்து
செப்பிட நாளும் இன்றே!
ஓதினார் நீதி பதிகள்- அன்னார்
உரைதானே சட்ட விதிகள்!
மேதினி போற்றும்! வாழ்க!-
மேன்மேலும் வளமை சூழ்க!

புலவர் சா இராமாநுசம்