திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி
திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா!
நெருக்கடியில் சிக்கிவிட்டேன் நாராயணா =பெரும்
நீள்வரிசை தள்ளுமுள்ளு நாராயணா!
உருப்படியாய் சேதமின்றி நாராயணா-மீள
உன்னருளே காரணமாம் நாராயணா!
திருப்படிகள பலகடந்து நாராயணா-உன்னை
தேடிவந்து காண்கின்றார் நாராயணா!
பாத்தயிடம் எல்லாமே நாராயணா-கண்ணில்
பக்தர்களே தென்பட்டார் நாராயணா!
மூத்தவர்க்கு தனிவரிசை நாராயணா-ஆனால்
முறையாக நடக்கவில்லை நாராயணா!
காத்திருக்கும் மக்களவர் நாராயணா- எங்கும்
கணக்கிடவே இயலாது நாராயணா!
நாத்தழும்பு ஏறிவிட நாராயணா-உந்தன்
நாமந்தான் ஒலிக்கிறது நாராயணா!
புலவர் சா இராமாநுசம்