Saturday, July 11, 2015

பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அம்மா-இங்கு பள்ளி மாணவியே மதுவருந்தல் ஆனதம்மா!



பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அம்மா-இங்கு
பள்ளி மாணவியே மதுவருந்தல் ஆனதம்மா!
ஓருங்கள் இனியேனும் மதுவை நீக்க- என்ன
உரியவழி ! காணுங்கள்! தீமைப் போக்க!
கூறுங்கள் மேலுமிது வளர்தல் நன்றா-தாயாம்
குலத்திற்கே மாசாகும்! தீரும் ஒன்றா!?
மாறுங்கள்! மதுவிலக்கு கொள்கை தன்னில்- நீங்கள்
மனம்வைத்தால் நடந்துவிடும்! உண்மை எண்ணில்!


எதிர்கால சந்ததியர் வாழ வேண்டும் –இன்று
எடுக்கின்ற முடிவாலே நாட்டில் மீண்டும்!
சதிராடும் மதுவெறியே முற்றும் போகும்-வரும்
சரித்திரத்தில் உம்பெயரே நிலையாய் ஆகும்!
நிதிவேறு வழிதனிலே தேடிக் கொள்வீர –நீங்கள்
நினைத்தாலே போதுமது !முடியும் ! வெல்வீர்!
மதிமாறும் மதுவாலே மனிதக் கூட்டம்- அன்னார்
மனம்மாறிக் கொள்வாரே குடும்ப நாட்டம்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 9, 2015

எங்கள் வீட்டின் முன்னாலே –பிறர் எறியும் குப்பைத் தன்னாலே


எங்கள் வீட்டின் முன்னாலே –பிறர்
எறியும் குப்பைத் தன்னாலே
அங்குமிங்கும் சிதறி விடும்- மேலும்
அதனால் தெருவே மாசுபடும்
தங்கும் குப்பையோ மலையாகும்- நாளும்
தவறாது எடுப்பதோ இலையாகும்
பொங்கும் நாற்றம் மேயரய்யா – உடன்
போக்குவீர் குறையை வணக்கமய்யா


புலவர் சா இராமாநுசம்

Monday, July 6, 2015

எழுநூற்று ஐம்பது பதிவு தன்னை –நான் எழுதிவிட்டேன் மகிழ்வாக வாழ்த்தும் என்னை



எழுநூற்று ஐம்பது பதிவு தன்னை –நான்
எழுதிவிட்டேன் மகிழ்வாக வாழ்த்தும் என்னை-இன்று
தொழுகின்றேன் உறவுகளே உம்மை எல்லாம் –மேலும்
தொடர்வீரே! மறுமொழியாய் நாளும் பல்லாம்-ஏதும்
வழுவாக எச்செயலும் செய்தேன் இல்லை –நன்மை
வருமென்று மாற்றார்க்கும் தாரேன் தொல்லை-நொந்து
அழுவர்க்கும் உதவுகின்ற குணமும் கொண்டேன் –என்னை
அறிந்தார்கும் இதுதெரியும்! உண்மை! விண்டேன்!


எத்தனையோ கற்பனைகள் நெஞ்சில் எழுமே –முதுமை
எழுதிவிட தடைபோடும் உள்ளம் அழுமே-நானும்
புத்தனல்ல ஆசைகளை அடக்க இயலா –மனம்
போதிமரம் அல்லயிது! பொங்கும் புயலா?-நாளும்
சித்தமெனும் கடல்தன்னில் அடிக்கும் அலையா?-வானில்
சிறகடித்து பறக்கின்ற பறவை நிலையா?-அறியேனாக
(இவை)
அத்தனையும் தாண்டித்தான் எழுது கின்றேன் –உம்மோர்
அன்பாலே வலிமறந்து நாளும் வென்றேன்

புலவர் சா இராமாநுசம்