Friday, July 3, 2015

என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை!


தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரியும்
தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்
வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
மாண்டானே,கோகில்ராஜ் ! சாதி! வெறியில்-அந்தோ
மாறாதா!? இந்நிலையே! நீதி! நெறியில்!


ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே
நாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 2, 2015

காண்பதே இன்றைய மனிதநிலை!



போதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே!
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே!
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்!
சொல்லில் இன்றைய மனிதநிலை!


மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்!
ஊரும் மாறிப் போயிற்றே!
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்!
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை!
இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே!
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல!
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென!
குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே!
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே!
முற்றும் துறந்தது கபடமென!
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை!
காண்பதே இன்றைய மனிதநிலை!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 1, 2015

தலைக்கனம் இல்லை என்றே –காவலர் தடுத்திடும் நிகழ்வுகள் இன்றே!



தலைக்கனம் இல்லை என்றே –காவலர்
தடுத்திடும் நிகழ்வுகள் இன்றே!
விலை,கனம் வாங்க வில்லை –என்ற
வேதனை அறியாத் தொல்லை!
இலை,கனம் பையில் ஆமே –பணம்
இல்லாத குறையும் தாமே!
நிலைக்கனும் சட்டம் என்றால் –கால
நீட்டிப்பே நியாயம் இன்றாம்!


நடுத்தர குடும்பத் தாரே –இன்று
நாதியில் ஊமை யாரே!
எடுத்திதைச் சொல்லக் கூட –சற்றும்
எண்ணிடார்! நாளும் ஓட!
தடுத்திடும் சட்டம் கண்டே- அவர்
தாங்கிடார்! துயரம் கொண்டே!
விடுத்தனன்! நானும் இந்த –அரசை
வேண்டினேன் வணக்கம் தந்தே!

புலவர் சா இராமாநுசம்

Monday, June 29, 2015

நிம்மதி எங்கே தேடுகின்றோம்-நெஞ்சில் நீங்கிட நாளும் வாடுகின்றோம்



நிம்மதி எங்கே தேடுகின்றோம்-நெஞ்சில்
நீங்கிட நாளும் வாடுகின்றோம்
தம்மதி காட்டும் வழிதனிலே-நடக்கும்
தடமது மாறிட பழிதனிலே
நம்மதி கெட்டிட நடக்கின்றோம்-வாழ்வில்
நடப்பதே விதியென கடக்கின்றோம்
அம்மதி ஆய்ந்தே செல்வாரேல் –நிம்மதி
அடைந்து எதையும் வொல்வோராம்


புலவர் சா இராமாநுசம்