Saturday, June 27, 2015

ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


ஓராண்டு ஓடியது ஊழல் இல்லை-என்றே
ஒலித்திட்ட குரல்கூட அடங்க வில்லை-அதற்குள்
யாராண்டால் என்னயிங்கே மாறி விடுமா- ஐயம்
யாவருக்கும் வந்துவிட நாறி கெடுமா- வரும்
பாராளும் மன்றத்திலே பற்றும் தீயா'ம்- தினப்
பத்திரிக்கை செய்திகளே முற்றும் நோயாம்-மேலும்
ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய
ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


புலவர் சா இராமாநுசம்

Friday, June 26, 2015

இல்லை என்றால் பெரும்போரே-இங்கு ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே!



எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
எழுப்பிய பின்னர் அழுவாயா!
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்!
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
துணையால் நடப்பதே இக்கேடே!
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
கண்டவர் புத்தி மாறட்டும்!


முல்லைப் பெரியார் அணைமட்டும்-கேரள
மூடர்கள் கை யால் உடையட்டும்!
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
ஏக இந்தியா உடைந்திடுமே!
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
துடிப்புடன் விரைந்து தடுப்பீரே!
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 24, 2015

அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ என்று மாறும்!



எதுஊழல் எனஅறியார் மக்கள் என்றே- ஏனோ
எண்ணுவதோ ? எவர்வரினும் ஆள இன்றே!
இதுஊழல் என்றிடுவர் ஆட்சிக் கட்டில்-அவர்
ஏறிவிட்டால் மறுப்பாரே அதனை ஏட்டில்!
புதுஊழல் துறைதோறும் நாளும் தோன்றும்-உரிய
போக்குதனை கூறுகின்ற எந்த சான்றும்!
அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக
அவலங்கள் ஐயகோ என்று மாறும்!


புலவர் சா இராமாநுசம்

Monday, June 22, 2015

இனிய உறவுகளே! வணக்கம்!


இனிய உறவுகளே! வணக்கம்!
நேற்று நான் எழுதியிருந்த பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான் என்ற கவிதையை புகழ்ந்து பாராட்டிய தோடு,அதனை மேலும் இசையமைத்துப் பாடி தன்னுடைய வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய ,சுப்பு தாத்தா என்கின்ற பெயரோடு வலையுலகில் வலம் வரும் சூரிய சிவா
அவர்களுக்கு என் வணக்கத்த்தையும் வாழ்த்தையும் இங்கே தெரிவிப்பதோடு , அவர் பாடியுள்ள வலைத் தளத்தின் முகவரியையும் கீழே தந்துள்ளேன் விருப்ப முள்ளோர் கேட்டு மகிழ வேண்டுகிறேன்
www.vazhvuneri.blogspot.com

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...