Saturday, June 20, 2015

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வழ்வில் ஒருமுறைதான்!



பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழ்வில் ஒருமுறைதான்!
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்!
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா!
வெறுப்பா மற்றவர் நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க!


எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!

மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர!
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே!
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்கப் பண்ணிரேல்!
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, June 18, 2015

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே!



ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும்
எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும்
திசைகாணா துயர்தன்னில் வீழுகின்றோம்-மேலும்
போதாதா விலைவாசி விண்ணைமுட்ட –தினம்
புலம்பிட மக்களும் கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட இயலவில்லை-ஏதோ
உள்ளத்தை வருத்திட இந்ததொல்லை


பகல்கொள்ளை படுகொலை பெருகிப் போச்சே-நாளும்
பயத்துடன் வாழ்கின்ற நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி! வருந்த லாச்சே-நாடும்
போவதோ காடாக! மாற லாச்சே!-மேலும்
மழையில்லை! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
மனம்குமுற, விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப்
பேதையர் அன்னாரைக் காக்க வாரீர்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 16, 2015

மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது !



கோடிகளில் ஊழல் செய்து .தப்பி ஓடி வெளிநாட்டில் .தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப் பட்ட கேடிகளுக்குக் காட்டப்படும் மனிதநேயம், இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் முதலானோர் குற்றம் சாட்டி ,துக்குத் தண்டனை பெற்று பின் ஆயுள் தண்டணையாக மாற அதற்குரிய காலத்தை அவர்கள் அனுபவித்து ஆண்டுகள் கடந்தும், கருணை அடிப்படையில் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்த பின்பும் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருப்பதற்கு பெயர் என்ன!

மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது ! அருள் கூர்ந்து அதனை இழிவு படுத்தாதீர்கள்
என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, June 15, 2015

பறித்தாரே அணுவளவும் இரக்க மின்றே பாவிகளாம் அரக்கரென சொல்ல நன்றே!

 

எரித்தார்கள் உயிரோடு என்றச் செய்தி
இதயத்தை இரணமாக்க துயரம் எய்தி!
மரித்தாரும் தந்திட்ட வாக்கு மூலம்
மனம்விட்டு மறையாது நீண்ட காலம்!
முறித்தாராம் எழுத்தாளர் உரிமை மற்றும்
முறையற்ற அச்சத்தால் நீதி அற்றும்!
பறித்தாரே அணுவளவும் இரக்க மின்றே
பாவிகளாம் அரக்கரென சொல்ல நன்றே!


புலவர் சா இராமாநுசம்