Saturday, June 13, 2015

தீதும் நன்றும் பிறராலே தேடி வாரா! நம்மாலே!



தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா! நம்மாலே!
நோதலும் தணிதலும் அவ்வாறே
நவின்றனர் முன்னோர் இவ்வாறே!
சாதலின் இன்னா திலையென்றே
சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே!
ஈதல் இயலா நிலைஎன்றால்
இனிதாம் அதுவும் மிகஎன்றார்!


எல்லா மக்களுக்கும் நலமாமே
என்றும் பணிவாம் குணந்தாமே!
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
செப்பிடும் குறளாம் திருச்செல்வம்!
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
நாளும் நாளும் வளமுற்றே!
பல்லார் மாட்டும் பண்பாலே
பழகிட வேண்டும் அன்பாலே!

புலவர் சா இராமாநுசம்

Friday, June 12, 2015

ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்முடை இதயம் வேதனைக் கொண்டாலும்!



அச்சம் அகற்றி வாழ்வார்க்கு-வேறு
அரணே எதுவும் வேண்டாமே!
இச்சை அடக்கி வாழ்வார்க்கு-ஏதும்
இன்னல் வாரா ஈண்டாமே!
பச்சைக் கீரைக்கும் உப்பின்றி-மிகவும்
பழைய சோற்றுக்கும் வழியின்றி
பிச்சை எடுத்து வாழ்ந்தாலும்-கல்வி
பெற்றிட முனைவது நன்றாகும்!


ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்முடை
இதயம் வேதனைக் கொண்டாலும்!
சான்றோர் பழிக்கும் வினைவேண்டா-எனவும்
சாற்றிய குறளின் வழியிண்டே!
ஆன்றோர் கூறும் நெறிதன்னில்-நன்கு
அறிந்து நடப்பின் துயருன்னில்
தோன்றா வகையில் நிலைதருமே-என்றும்
தோல்வி காணா வளம்பெறுமே!

புலவர் சா இராமாநுசம்

Thursday, June 11, 2015

ஐயன் வழிதனில் செல்வீரே அன்பால் உலகை வெல்வீரே!



திரைகடல் ஓடு என்றாரே
திரவியம் தேடு என்றாரே!
குறையிலா வழியில் அதைப்பெற்றே
கொள்கையாய் அறவழி தனைக்கற்றே!
நிறைவுற அளவுடன் நிதிசேர்ப்பீர்
நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்!
கறையிலா கரமென புகழ்பெறுவீர்
கண்ணியம் கடமை எனவாழ்வீர்!


வையம் தன்னில் வாழ்வாங்கும்
வாழின்! வாழ்வில் பெயரோங்கும்!
செய்யும் எதையும் தெளிவாகச்
செய்யின் வருவது களிவாகப்!
பொய்யோ புரட்டோ செய்யாமல்
போலியாய் வேடம் போடாமல்!
ஐயன் வழிதனில் செல்வீரே
அன்பால் உலகை வெல்வீரே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 9, 2015

உழுது உழுது அலுத்தவனே உதிரிப் பூவாக ஆகிவிட்டான்!



உழுது உழுது அலுத்தவனே
உதிரிப் பூவாக ஆகிவிட்டான்!
அழுது அழுது வடித்த கண்ணீர்
ஆவி ஆனது வெம்மையிலே!
தொழுது வணங்க வேண்டியவன்
துவளவும் கைகள் முடங்கிவிடின்!
பழுது வந்திடிம் உலகத்திலே
பசியோடு பஞ்சமே கலகத்திலே!


அல்லும் பகலுமே பாடுபட்டோன்
அயராது சேர்த்திட்ட பொருளின்விலை!
சொல்லும் நிலையே அவனுகுண்டா?
சொல்லுங்கள் யாரேனும் கண்டதுண்டா!
கொல்லும் பசிப்பிணி மருத்துவனின்
குமுறும் உள்ளத்தை அறிந்திடுவீர்!
ஒல்லும் வழிதன்னை காண்பதுவே
உண்மையில் ஆள்வோரின் மாண்பதுவே!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, June 8, 2015

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?



பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா?
வெள்ளிப் பணமே குறியாக –பெற்றவர்
வேதனைப் படுவதே நெறியாக!
சொல்லிக் கொடுப்பதில் இரண்டாமே-பாடம்
சொல்வதில் பிரிவு முறையாமே!
உள்ளுவீர்! தனியார் பள்ளிகளே –உடன்
உணர்வீர்! இன்றேல் கறையாமே!!


புலவர் சா இராமாநுசம்